TVK Madurai Manadu: தடங்கலுக்கு மேல் தடங்கல்.. கீழே விழுந்த 100 அடி உயர கொடிக்கம்பம்.. தாக்கத்தை ஏற்படுத்துமா தவெக மாநாடு?
TVK Maanadu Madurai: மதுரையில் நாளை நடைபெற உள்ள தவெக மாநாட்டில் நடப்பட இருந்த 100 அடி கொடிக்கம்பம் கீழே விழுந்து கார் ஒன்று நொறுங்கியது.

TVK Maanadu Madurai: தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றன. திமுக, அதிமுக போன்ற பலமான கட்சிகளுக்கு எதிராக இந்த சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக களமிறங்கியுள்ளது. இதனால், மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நாளை தவெக மாநாடு:
கட்சி தொடங்கியதும் தமிழக அரசியலில் பம்பரமாக சுழன்று செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விஜய் மிகவும் மந்தமாக செயல்படுவதாகவும், மக்களைச் சந்திக்க மறுப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு நடைபெறுகிறது.
கீழே விழுந்த 100 அடி கொடிக்கம்பம்:
மதுரை பாரபத்தியில் நாளை நடக்கும் இந்த மாநாட்டிற்காக கடந்த இரண்டு மாதங்களாக பணிகள் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் 100 அடி உயரத்திற்கு கொடி கம்பத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நடிகர் விஜய் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. இந்த நிலையில், இந்த கொடி கம்பம் நடுவதற்கான பணிகள் இன்று நடந்து வந்த நிலையில், கொடி கம்பம் திடீரென சாய்ந்து கீழே விழுந்தது.
தவெக மாநாடு - 100 அடி கொடிக்கம்பம் கார் மீது விழுந்து சேதமடைந்ததால் பரபரப்புhttps://t.co/wupaoCzH82 | #TVK #TVKMaduraiMaanadu #TVKVijay #Madurai #ABPNadu #MaduraiManadu pic.twitter.com/4PTzfYKC7I
— ABP Nadu (@abpnadu) August 20, 2025
கிரேன் மூலமாக மேலே அந்த இரும்பு கம்பத்தை மேலே தூக்கியபோது திடீரென கிரேனில் இருந்து கம்பத்தை தாங்கிய கயிறு அறுந்து விழுந்து கீழே விழுந்தது. இதனால், அங்கே கூடியிருந்த தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் அலறியடித்து ஓடினார். 100 அடி உயரம் என்பதால் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த இன்னவோ கார் மேலே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த காரின் உள்ளே யாரும் இல்லாததால் யாருக்கும் காயமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை. இந்த சம்பவம் தவெக-வினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
தடை மேல் தடை:
இதனால், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 100 அடி உயர கம்பியில் நாளை விஜய் அக்கட்சியின் கொடியை ஏற்றுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மாநாடு அறிவிப்பு வெளியானது முதலே தவெக-வினருக்கு தடை மேல் தடை ஏற்பட்டு வருகிறது. முதலில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு ஆகஸ்ட் 25ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், விநாயகர் சதுர்த்தி 27ம் தேதி வருவதால் பாதுகாப்பு வழங்குவதில் சிரமம் என்பதால் பின்னர் மாநாடு 21ம் தேதிக்கு மாற்றப்பட்டது. மேலும், இந்த மாநாட்டிற்கு தொடக்கத்தில் காவல்துறை அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர், பல போராட்டங்களுக்கு பிறகு மாநாட்டிற்கு அனுமதி கிடைத்தது.
நாற்காலிக்கு போராட்டம்:
மாநாட்டில் லட்சக்கணக்கான தவெக தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அவர்கள் அமர்ந்து பார்ப்பதற்கு நாற்காலிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் நாற்காலி தருவதாக கூறிய ஒப்பந்ததாரர் நாற்காலி தரவில்லை. இதையடுத்து, அவசரம் அவசரமாக கேரளாவில் இருந்து நாற்காலிகளை இறக்குமதி செய்தனர்.
மேலும், மாநாடு நடைபெறும் நாளான நாளை மதுரையில் மழை பெறுவதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், இன்று 100 அடி கொடிக்கம்பமும் சாய்ந்து கீழே விழுந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு நடத்துவதற்கு தொடர்ந்து தடங்கல் மேல் தடங்கல் ஏற்பட்டு வருகிறது.
தாக்கத்தை ஏற்படுத்துமா தவெக மாநாடு?
இத்தனை தடைகள், தடங்கலை கடந்து நாளை நடக்க உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு தவெக-விற்கு மிகப்பெரிய உத்வேகத்தையும், எழுச்சியையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்துமா? என்பது விஜய் முன்பு உள்ள சவால் ஆகும். அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்திய பிறகு பொதுவெளியில் வராத விஜய் மீண்டும் நாளை பொதுமேடையில் தோன்றுகிறார். விஜய் என்ன பேசப்போகிறார்? விஜய் தன் மீதான விமர்சனங்களுக்கு விடை சொல்வாரா? என்ற கேள்விக்குமான விடையும் நாளையே தெரிய வரும்.





















