TVK Maanadu Madurai: குடும்பம் குடும்பமாய் குவிந்த தொண்டர்கள்.. மக்கள் வெள்ளத்தில் தவெக மாநாடு - குஷியில் டிவிகே பாய்ஸ்
TVK Maanadu Madurai: தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநாடு நடக்கும் இடத்தில் பெண்களும், குழந்தைகளும் குவிந்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர். திமுக-வி்ன் பலமான கூட்டணி, ஆட்சியைப் பிடிக்க அதிமுக-வின் தீவிரம், தீவிர பரப்புரையில் நாம் தமிழர் கட்சி ஆகியோருக்கு மத்தியில் அரசியல் களத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருப்பவர் நடிகர் விஜய்.
தவெக மாநாடு:
தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழும் நடிகர் விஜய் தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர். இதனால், அரசியல் களத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று கருதப்படுகிறது. குறிப்பாக, முதல் தலைமுறையினர் வாக்குகளை பெரியளவில் விஜய் கவர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சி தொடங்கி ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் மிகப்பெரிய தாக்கத்தை இதுவரை தமிழக அரசியலில் விஜய் ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில், நாளை மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநாடு நடக்கிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் நடக்கும் இந்த மாநாட்டில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடும்பம், குடும்பமாய் குவியும் தொண்டர்கள்:
அதிகளவு ரசிகர்களை கொண்ட விஜய்யின் மாநாடு நடக்கும் திடலில் இன்று மாலை முதலே தொண்டர்கள் குவிந்து வருகின்றனர், பலரும் தங்களது குடும்பத்தினருடன் வந்துள்ளனர். சிலர் நாளை மாநாட்டுத் திடலை காண இயலாது என்று இன்றே நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றனர். சிலர் இன்று இரவு முதலே மாநாட்டுப் பந்தலில் இடம் பிடித்து வருகின்றனர்.
பெண்கள், குழந்தைகள் என மிகுந்த ஆர்வத்துடன் விஜய்யைப் பார்க்க பலரும் குவிந்து வருகின்றனர். இதனால், மதுரை அருப்புக்கோட்டை செல்லும் நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்துச் செல்கின்றனர். வழிநெடுகிலும் தவெக கொடிகள் நடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் சுமார் 4 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
என்ன பேசப்போகிறார் விஜய்?
மாநாட்டில் பங்கேற்பதற்காக கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் இன்று மாலை மதுரை வந்தார். அவர் மாநாடு நடைபெறும் சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் தற்போது தங்கியுள்ளார். தவெக-வின் கொள்கை, கூட்டணி, மக்களைச் சந்திக்க மறுக்கிறார் என்ற பல குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் விஜய் நடத்தும் மாநாடு என்பதால் விஜய் இதில் என்ன பேசப்போகிறார்? என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தவெக-விற்கான மாநாட்டில் விஜய் 100 அடி உயரத்தில் கொடி கம்பம் ஏற்றுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மாநாட்டுத் திடலில் இன்று 100 அடி உயர கொடிக்கம்பத்தை நட முயற்சித்தபோது அது கிரேனில் இருந்து தவறி விழுந்தது. இதனால் அங்கிருந்த கார் ஒன்று நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போது விஜய் கொடியேற்றுவதற்காக மாற்று கொடி கம்பம் ஏற்றப்பட்டுள்ளது.





















