"ஒரு மாதம்தான் அவகாசம்" எச்சரிக்கை விடுத்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் - என்ன தெரியுமா..?
மயிலாடுதுறை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து மனநல நிறுவனங்களும், தமிழ்நாடு மனநல ஆணையத்தில் ஒரு மாத காலத்திற்குள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் உத்தரவிட்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து மனநல நிறுவனங்களும், தமிழ்நாடு மனநல ஆணையத்தில் ஒரு மாத காலத்திற்குள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், உத்தரவிட்டுள்ளார். அவ்வாறு தவறும் பட்சத்தில், உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பு
இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மயிலாடுதுறை மாவட்டத்தில் இயங்கி வரும் மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள் என பல வகையான மனநல நிறுவனங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் அனைத்தும் மனநல பராமரிப்பு சட்டம் 2017-ன் படி மாநில மனநல ஆணையத்திடம் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்பது அவசியமாகும். ஆனால், பெரும்பாலான மையங்கள் இன்னும் பதிவு செய்யாமல் சட்டத்திற்கு புறம்பாக இயங்குவதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பதிவு செய்யாமல் இயங்கி வரும் அனைத்து மனநல நிறுவனங்களுக்கும் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அவகாசத்திற்குள், அவர்கள் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி, தமிழ்நாடு மாநில மனநல ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எங்கு பதிவு செய்ய வேண்டும்?
மனநல மையங்களை பதிவு செய்ய விரும்பும் உரிமையாளர்கள், முதன்மை செயல் அலுவலர், தமிழ்நாடு மாநில மனநல ஆணையம், அரசு மனநல காப்பக வளாகம், மேடவாக்கம் குளம் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை - 600 010. என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்ய, https://tnhealth.tn.gov.in/tngovin/dme/dme.php
என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்தலாம். மேலும், விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ ஆணையத்தின் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் விவரம் அறிய
கூடுதல் விவரங்களுக்கு, 044 - 2642 0965 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். சந்தேகங்கள் இருந்தால், tnsmha@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
மக்களுக்கு தரமான மனநல சேவைகள்
இந்த அறிவிப்பு குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் கூறுகையில், "மக்களுக்கு தரமான மனநல சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வது அரசின் கடமை. மனநல மையங்கள் முறையாக பதிவு செய்யப்படுவதன் மூலம், அவற்றின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும். இது, போலி மையங்கள் உருவாவதை தடுக்கும். மேலும், நோயாளிகளின் உரிமைகளும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். எனவே, அனைத்து மனநல மையங்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஒரு மாத காலத்திற்குள் பதிவு செய்ய வேண்டும்" என்றார்.
ஒரு மாதத்திற்குள் நடைமுறை
மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பை மீறி செயல்படும் மையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, உரிமம் பெறாமல் இயங்கும் அனைத்து மனநல மையங்களும் உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது, மாவட்டத்தில் மனநல சேவைகளின் தரத்தை மேம்படுத்த ஒரு முக்கியமான படியாகும்.






















