வேட்பாளர்களை அறிவிக்கும் விஜய் ?சர்ப்ரைஸ் கொடுக்க போகும் மதுரை தவெக மாநாடு!
Tvk conference: "தமிழக வெற்றி கழகத்தில் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நாளை நடைபெற உள்ளது"

மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தி பகுதியில், 600 ஏக்கர் பரப்பளவில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நாளை நடைபெற உள்ளது இந்நிலையில் மாநாடு முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
விஜய்க்கு முக்கியத்துவம் வாய்ந்த மாநாடு
கடந்தாண்டு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில், விஜய் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாட்டை நடத்தி இருந்தார். முதல் மாநாடு என்பதால் விஜய் எதிர்பார்த்து அளவிற்கு கூட்டம் வந்திருந்தது. அதன் பிறகு விஜய் முழு வீற்றில் கட்சிப் பணிகளை மேற்கொள்வார் என எதிர்பார்த்த நிலையில், பனையூரில் இருந்தே இதுவரை அரசியல் செய்து வருகிறார்.
பனையூரிலே அரசியல் செய்த விஜய்
பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்தினார். அதன் பிறகு சென்னையில், காவல்துறைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார். இது தவிர மக்கள் மத்தியில் நேரடியாக, விஜய் தோன்றாமல் இருப்பதால் பல்வேறு அரசியல் வல்லுனர்கள் விஜயை விமர்சித்து வருகின்றனர். சமீபத்தில் தூய்மை பணியாளர்கள் போராடிய போதும், அவர்களை பனையூரில் அழைத்துப் பார்த்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
விஜய்க்கு முக்கியத்துவம் வாய்ந்த மாநாடு
எனவே வருகின்ற சட்டமன்றத் தேர்தலை மையமாக வைத்து, மதுரையில் நடைபெற உள்ள மாநாடு விஜய்க்கு மிக முக்கியமான நாடாக பார்க்கப்படுகிறது. அவர் நடிக்கும் கடைசி திரைப்படத்தின், பணிகளும் முடிவடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநாட்டிற்கு பிறகு விஜய் முழுமையாக கட்சிப் பணியில் ஈடுபடுவார் என அக்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
இதனால் இந்த மாநாட்டில் முதல் மாநாட்டை விட, 50 சதவீதத்திற்கும் அதிகமான கூட்டத்தை அழைத்து வர வேண்டுமென நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவு பிறப்பித்ததாக தகவல் வெளியாகிறது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலை மையமாக வைத்து இந்த மாநாடு நடைபெறுவதால், மாநாட்டில் விஜய் என்ன பேசப்போகிறார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முக்கிய அறிவிப்பு வெளியாகுமா ?
அதுபோக முதல் மாநாட்டில், எங்களுடன் கூட்டணி வருபவர்களுக்கு ஆட்சியில் பங்கு அளிக்கப்படும், என தெரிவித்த பிறகும் எந்த கட்சியும் விஜய் பக்கம் போகாததால் விஜய் கடும் அப்செட்டில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இரண்டாவது மாநில மாநாட்டில், முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முதற்கட்ட வேட்பாளர் அறிவிப்பு ?
வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் மாநாட்டில் அறிவிப்பதற்கான முடிவில் விஜய் இருந்ததாக கூறப்படுகிறது. முக்கிய கட்சிகள் கூட்டணிக்கு வராத நிலையில், 234 தொகுதிகளிலும் ஒரே சின்னம் என்ற முழக்கத்துடன் வேட்பாளர்களை அறிவிக்கும் யோசனையில் விஜய் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநாட்டில் வேட்பாளர்கள் அறிவிக்க வேண்டாம், "கடைசி நேரத்தில் காட்சிகள் மாறலாம்" என விஜய்க்கு நெருங்கியவர்கள் அட்வைஸ் கொடுத்திருக்கின்றனர். இதனால் மாநாட்டில் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.





















