ராமலிங்கம் படுகொலை: NIA அதிரடி சோதனை! திண்டுக்கல்லில் SDPI பிரமுகர் வீட்டில் செல்போன், அடையாள அட்டை பறிமுதல்!
திண்டுக்கல் மாவட்டத்தில் NIA அதிகாரிகள் இன்று காலை திடீர் சோதனை மற்றும் விசாரணை நடத்தியதில் கொடைக்கானல் ஆம்பூர் பிரியாணி உரிமையாளர் இன்பத்துல்லா கைது
பாமக கட்சியை சேர்ந்த ராமலிங்கம் படுகொலை வழக்கில் திண்டுக்கல் உட்பட தொடர்புடைய 8 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், திண்டுக்கல்லில் ஷேக் அப்துல்லா என்பவர் வீட்டில் செல்போன் மற்றும் உறுப்பினர் அட்டை பறிமுதல் செய்தனர் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்.
தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவர் பாத்திர கடை தொழில் செய்து வருகிறார். 2019 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார் . இந்த கொலைக்கான முக்கிய காரணம் மதம் மாற்றம் செய்வதை ராமலிங்கம் கண்டித்ததாகவும் அதனால் ஏற்பட்ட பிரச்சனையில் தான் அவர் படுகொலை செய்யப்பட்டதாக தெரிய வருகிறது. இதை அடுத்து இந்த வழக்கானது தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம் செய்யப்படுகிறது.
இந்த கொலை வழக்கில் 18 பேர் குற்றம் சாட்டப்பட்டு 10 நபர்கள் கைதான நிலையில், 5 பேர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர். இந்த விசாரணையானது நடைபெற்று கொண்டு வரும் சூழ்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூம்பாறை பகுதியில் பதுங்கி இருந்த முகமது அலி என்பவரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்தது. இந்த நிலையில் இன்று திண்டுக்கல் பேகம்பூர் பகுதி ஜின்னா நகரில் வசித்து வரும் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொருளாளர் ஆன ஷேக் அப்துல்லா என்பவரது இல்லத்தில் காலை 6:00 மணி முதல் 3 தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில்,
இதேபோல் ஒட்டன்சத்திரம் யூசுப் என்பவரது இல்லத்திலும் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த உமர் என்பவரது இல்லத்திலும் கொடைக்கானல் உள்ளிட்ட 8 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். திண்டுக்கல் ஷேக் அப்துல்லா வீட்டில் நடைபெற்ற சோதனை தற்போது முடிவடைந்த நிலையில் ஷேக் அப்துல்லாவின் எஸ் டி பி ஐ அடையாள உறுப்பினர் அட்டை மற்றும் அவரது கைபேசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வருகிற 25ஆம் தேதி சென்னை அலுவலகத்தில் ஆஜராகும்படி கையொப்பம் வாங்கியுள்ளனர்.
இந்நிலையில் இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில் NIA அதிகாரிகள் சுமார் 25க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல். கொடைக்கானல், ஒட்டன்சத்திரம் வத்தலகுண்டு உள்ளிட்ட பகுதிகளில் விசாரணை மற்றும் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக கொடைக்கானல் நகர் பகுதி மற்றும் பூம்பாறை பகுதிகளில் சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட பகுதிகளில் சோதனை நடைபெற்றது. மேலும் விசாரணையின் முடிவில் கொடைக்கானல் நகர் பகுதியில் ஆம்பூர் பிரியாணி கடை நடத்தி வரும் இன்பதுல்லா என்பவரை NIA அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் காவல்துறையினரும் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்





















