Mulla Periyar Dam | முல்லைப் பெரியாறு அணை விவகாரம் : உரிமை பறிபோனதா? - டிடிவி தினகரன் கேள்வி
சென்னை: முல்லைப் பெரியாறு அணையில் தமிழ்நாட்டுக்கு இருக்கும் 126 ஆண்டுகால உரிமை பறிபோனதா என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறக்கும் உரிமையைத் தி.மு.க அரசு கேரளாவிடம் பறிகொடுத்துவிட்டதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
திமுக ஆட்சிக்கு வந்தாலே தமிழ்நாட்டின் உரிமைகளை சுயலாபத்திற்காகவோ, துணிவின்மையாலோ காவு கொடுத்துவிடுவார்கள் என்ற கடந்த கால வரலாற்றை முல்லைப்பெரியாறு விவகாரத்தில் மீண்டும் நிரூபித்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.
உச்சநீதிமன்றத்திற்குச் சென்று போராடி முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரைத் தேக்கலாம் என்று தீர்ப்பைப் பெற்றுத் தந்து, அதன்படியே அணையில் தண்ணீரையும் தேக்கிக் காட்டியவர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். ஆனால், தற்போது நீர்மட்டம் 138 அடியைத் தாண்டியவுடனேயே கேரள அமைச்சர்களும், அம்மாநில அதிகாரிகளும் தமிழக அரசுக்கு தெரியாமலேயே முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு தண்ணீரை திறந்துவிட்டதாக வெளியாகி உள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
இதன்மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் திரு.ஸ்டாலின் மவுனம் சாதிப்பது ஏன்?
1.தமிழக அரசின் அனுமதியில்லாமல் கேரள அதிகாரிகள் அவர்களுடைய மாநிலத்திற்கு தண்ணீரை திறந்துவிட்டது எப்படி? இதன் மூலம் அணை கட்டப்பட்டதில் இருந்து 126 ஆண்டுகளாக தமிழ்நாட்டிடம் இருந்த உரிமை பறிபோய்விட்டதா?
2. உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரைத் தேக்குவதற்கு திமுக அரசுக்கு தடையாக இருப்பது எது?
3. முல்லைப் பெரியாறு அணை குறித்து ஏற்கனவே பல்வேறு பொய் பரப்புரைகளை கேரளா தொடர்ந்து மேற்கொண்டுவரும் நிலையில், அதற்கு வலு சேர்க்கும் வகையில் திமுக அரசு நடந்துகொள்வது ஏன்?
4. தமிழ்நாட்டின் ஐந்து மாவட்ட மக்களுக்காக கட்டப்பட்ட அணையில் இருந்து அவர்களது பயன்பாட்டுக்கான தண்ணீரை கேரளாவுக்கு திறந்துவிட வேண்டிய அவசியம் என்ன?
5. இதற்கு அனுமதித்த தவறை மூடிமறைக்க முயற்சிப்பதோடு, அதனை நியாயப்படுத்தும் வகையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் பேசுவது தென்மாவட்ட மக்களுக்கு செய்யும் மிகப்பெரும் துரோகமில்லையா?
6.தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள அணைப்பகுதியில் கேரளாவின் நீர்வளம் மற்றும் வேளாண் துறைகளின் அமைச்சர்களும் அதிகாரிகளும் தொடர்ந்து முகாமிட்டு ஆய்வு செய்யும் நிலையில், தமிழகத்தின் நீர்வளத்துறை அமைச்சரும், வேளாண்துறை அமைச்சரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இதுவரை இவர்கள் அங்கே சென்று ஆய்வு செய்யாதது ஏன்?
இந்த கேள்விகளுக்கெல்லாம் முதலமைச்சர் உரிய விளக்கமளிப்பாரா? முல்லைப்பெரியாறு அணையில் தமிழ்நாட்டின் உரிமை காப்பாற்றப்படுமா? இல்லை தனது தந்தை கருணாநிதி காலத்தைப் போல தமிழகத்தின் உரிமையைப் பறிகொடுத்துவிடுவாரா” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்