TN Assembly : வடசென்னையில் பழைய கழிவுநீர் குழாய்கள் அகற்றப்படும் - அமைச்சர் கே.என்.நேரு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது திமுக எம்.எல்.ஏ ஐட்ரீம்ஸ் மூர்த்தி, ராயபுரம் தொகுதியில் புதிய கழிவுநீர் குழாய்கள் பதிக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.
வடசென்னை முழுவதும் உள்ள பழைய கழிவுநீர் குழாய்களை அகற்றி புதிய கழிவுநீர் குழாய்கள் அமைக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான பொதுவிவாதம் நடைபெற்றது. அதன்பின்னர் தற்போது மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று போக்குவரத்து மற்றும சுற்றுலா துறைகளின் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது. இன்றைய நிகழ்வில் போக்குவரத்துதுறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் முக்கிய அறிவுப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், சென்னை அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணை வேந்தரை அரசே நியமிக்க அதிகாரமளிக்கும் மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய இருக்கிறார்.
இந்தநிலையில், தமிழ்நாடு சட்டபேரவையில் கேள்வி நேரத்தின்போது திமுக எம்.எல்.ஏ ஐட்ரீம்ஸ் மூர்த்தி, ராயபுரம் தொகுதியில் புதிய கழிவுநீர் குழாய்கள் பதிக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, "ராயபுரம், பெரம்பூர், ஆர்.கே.நகர் மட்டுமில்லை. வடசென்னை முழுவதும் பழைய கழிவுநீர் குழாய்களை அகற்றப்பட்டு, புதிய கழிவு நீர் குழாய் 3 ஆயிரம் கோடி செலவில் அமைப்பதற்கான அறிவிப்பை முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில், வடசென்னை முழுவதும் பழைய கழிவுநீர் குழாய்களை அகற்றி புதிய கழிவுநீர் குழாய்களைப் பதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரூ.198 கோடி மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும், பல்வேறு திட்டங்கள் குறித்து அமைச்சர் கே. என். நேருவிடம் சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கும் பதிலளித்த அவர், மதுரை உள்ளிட்ட தமிழ்நாட்டில் 10 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தல் நடைபெற்று ஆட்சி மாற்றத்திற்கு பின் பணிகளில் சில காலம் தொய்வு ஏற்பட்டு விட்டது.
தற்போது அவை ஒவ்வொரு நகரமாக ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் முடிக்கப்பட்டு வருவதாகவும், மதுரை உள்பட 10 நகரங்களிலும் விடுபட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்