Rajendra Balaji Vs Mafoi Pandiarajan | மிரட்டிய ராஜேந்திர பாலாஜி!EPS-யிடம் போட்டு கொடுத்த மாஃபா தூதுவிடும் தவெக!
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மாஃபா பாண்டியராஜனை கடுமையாக விமர்சித்து மிரட்டல் தொணியில் பேசியிருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை மாஃபா பாண்டியராஜன் திடீரென சந்தித்து உள்ளதாக தகவல் வெளியாகி அதிமுகவில் புகைச்சலை கிளப்பியுள்ளது.
தேமுதிகவில் இருந்து அதிமுகவில் இணைந்தவர் மாஃபா பாண்டியராஜன். வேறு கட்சியில் இருந்து வந்தாலும் குறுகிய காலத்திலேயே அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் நன்மதிப்பை பெற்றார். இதன் காரணமாக, 2016 சட்டமன்ற தேர்தலில் ஆவடியில் போட்டியிட வைத்தது மட்டும் இன்றி அமைச்சர் பதவியும் வழங்கினார் ஜெயலலிதா. அதிமுக இரண்டாக உடைந்தபோது ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக மாறினார். கட்சி, எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் வந்ததால் மாஃபா பாண்டியராஜன், தனது அமைச்சர் பதவியை இழந்தார். மீண்டும் அதிமுக ஒன்றானபோது, மாஃபா பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், கடந்த 2021ஆம் ஆண்டு, சட்டமன்ற தேர்தலில் ஆவடியில் போட்டியிட்ட இவர் தோல்வியை தழுவினார். மீண்டும் அதிமுக பிளவை சந்தித்தபோது, இபிஎஸ் ஆதரவாளராக மாறினார்.
இருப்பினும், முன்பு, ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த காரணத்தால் கட்சிக்குள் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாமல் இருந்தது. இதற்கிடையே, அவர் மீண்டும் கட்சி மாறப்போவதாக தகவல்கள் வெளியாகின. தன்னுடைய பாதையை மாற்றி பனையூருக்கு காரை விட ரெடியாகி வருகிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். தன்னைப் போன்ற அறிவாளிகளையும் ஏற்கனவே ஆட்சியில் பங்காற்றியவர்களையும் விஜய் தன்னுடன் வைத்துக்கொண்டால், அது அவருக்கு பலம்தான் என்ற ரீதியில் த.வெ.க முக்கிய நிர்வாகியிடம் தன் பலத்தை பற்றி சிலாகித்து பேசியதோடு, தனக்கு ப்ரோமோஷன் செய்யும் பணிகளையும் செய்ய முடிவெடித்துவிட்டாதாகவும் விரைவில் அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது உறுதி என்கிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள். ஆனால், அவர் தரப்பு மறுப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில்தான், அதிமுகவின் முகமாக இருந்து வரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக அரசியல் செய்ய தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.ராஜேந்திர பாலாஜி குறுநில மன்னர் போல் செயல்படுவதாக மீது விமர்சனம் முன்வைத்தார். இதற்கு பதிலடி அளித்துள்ள ராஜேந்திர பாலாஜி, கட்சியை காட்டிக்கொடுத்தவர் மாஃபா பாண்டியராஜன். எனக்கு வரலாறு உள்ளது. உனக்கு என்ன வரலாறு இருக்கு? நீ செய்வதெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்க நான் ஒன்றும் கிறுக்கன், பைத்தியக்காரன் அல்ல, தொலைத்துவிடுவேன். என்னைப் பற்றி பேச வேண்டுமானால் விருதுநகரில் வைத்து பேச வேண்டும். சென்னையில் சென்று ஏன் பேசுகிறாய்?" என்றார்.
இந்த நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சு குறித்து எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து மாஃபா பாண்டியராஜன் புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ராஜேந்திர பாலாஜி பேசிய வீடியோவையும் போட்டு காட்டியதாக கூறப்படுகிறது.





















