நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
தமிழுக்கு ஏதேனும் பங்கம் ஏற்பட்டால் பா.ஜ.க. தொண்டன் உயிரையும் கொடுப்பான் என்று தமிழிசை செளந்தரர்ராஜன் பேசியுள்ளார்.

தமிழாட்டில் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு ஆளுங்கட்சியான திமுக மட்டுமின்றி பல கட்சிகளும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, அதில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தி திணிப்பில் மத்திய அரசு ஈடுபடுவதாக திமுக அரசு குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு பா.ஜ.க. மறுப்பு தெரிவித்து வருகிறது.
இந்தி இசையா?
இந்த நிலையில், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் இன்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது, திமுக இணையதளவாசிகளுக்கு நான் ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன். மறுபடியும், மறுபடியும் இந்தி இசை, இந்திக்காக போராடுனாங்க. நான் உங்க முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவிச்சப்ப கூட மும்மொழினு சொல்லி, மூன்றாவது மொழியாக தெலுங்கைத் தான் நான் கொடுத்திருந்தேன். ஏனென்றால் அது நம் சகோதர மொழி என்பதால்.
கிரகிப்புத் தன்மை:
அதுக்கு முதலமைச்சர் ஒரு பதில் போட்ருந்தாரு. தேவையென்றால் கற்றுக்கொள்ளலாம். சகோதரி தெலங்கானா ஆளுநராக இருந்தபோது தெலுங்கு கத்துகிட்டாங்க. அவங்க வாழ்த்தில் திராவிட இயக்கத்தைப் பின்பற்றாங்கனு சொல்லி இருந்தாரு. முதலமைச்சரே வயசான பிறகு தெலுங்கு கத்துக்குறது எவ்வளவு கஷ்டம்னு எனக்குத் தெரியும்.
கஷ்டப்பட்டு கத்துக்குறதை குழந்தைங்க இலகுவாக கத்துக்கட்டும். நான் மருத்துவர் என்பதால் எனக்குத் தெரியும். நம்ம மூளை 10 வயது வரை அதிகமான கிரகிப்புத் தன்மை கொண்டது. அதனால்தான், ஆங்கில மீடியம் பள்ளியில் படிக்கும் குழந்தைங்க ஆங்கிலத்தை வயசான பிறகு படிக்குறதை விட சின்ன வயசுல படிக்குறப்ப கிரகித்து கொள்கிறார்கள்.
அப்பா ஆட்சி:
இரணடு, மூன்று மொழிகள் அல்ல நான்கு மொழிகளை கூட கிரகித்துக் கொள்ளும் தன்மை இந்த மூளைக்கு உண்டு. வயதான பிறகு படித்தால் இவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கிறதே, அப்போதுதான் குழந்தை சின்ன வயசுலயே படிக்கனும்னு நான் பதிவு போட்டேன். தேவையென்றால் படித்துக்கொள்வது என்பது இல்லை. 3வது மொழி தேவை என்பதால் படிக்க வைக்கிறோம். அது வாய்ப்புகளை விரிவடையச் செய்யும். மக்களுக்கு இன்னும் வாய்ப்புகளை விரிவடையச் செய்யும்.
இன்பநிதியோட அப்பா, உதயநிதியோட அப்பா, ஸ்டாலினோட அப்பா அப்படினு இங்கு அப்பப்பா.. ஆட்சியே அப்பா ஆட்சியாக போயிகிட்டு இருக்கும்போது நாங்கள் என்ன செய்வோம். சாதாரண குழந்தைகள் போட்டிகளில் அதற்காக தயாராக வேண்டியிருக்கிறது. அதற்கு புதிய கல்விக்கொள்கை தேவை.
பாஜக தொண்டன் உயிரை கொடுப்பான்:
புதிய கல்விக்கொள்கை என்றாலே இந்தி, இந்தி என்று சொல்வதை நான் மறுக்கிறேன். இந்தியை திணிக்கிறாங்க.. இந்தியை திணிக்குறாங்க என்றால் திணிக்காத இந்தியை நீங்கள் இந்தியை திணித்துக்கொண்டிருக்கிறீர்கள். தமிழ் எங்கள் உரிமை என்கிறார்கள். புதிய கல்விக்கொள்கை அதைத்தான் சொல்கிறது.
5வது வரை தமிழில் கற்றுக்கொடுங்கள் என்பது எப்படி தமிழுக்கு எதிராக இருப்பது? பா.ஜ.க.விற்கும் தமிழ் உயிர்போன்றது. தமிழுக்கு ஏதாவது பங்கம் வந்தால் பா.ஜ.க. தொண்டன் உயிரையும் கொடுப்பான். உங்களை மாதிரி ஆங்கிலத்திற்கு வெண்சாமரம் வீசிக்கொண்டு, தனியார் பள்ளி நடத்தி இந்தி போன்வற்றை சொல்லிக்கொண்டு வெளிவேஷம் போடுபவர்கள் நாங்கள் அல்ல. கோயிலுக்கு போகமாட்டேன் என்பார்கள். ஒளிந்து கொண்டு கோயிலுக்கு போவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.




















