ஸ்ரீ பெரும்புதூர் பேரூராட்சியில் காங்கிரசை வீழ்த்தி திமுக வெற்றி - திமுகவினர் துரோகம் செய்துவிட்டதாக புலம்பல்
திமுக கூட்டணி சார்பில் பேரூராட்சி தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கவுன்சிலர் செல்வமேரி அருள்ராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக கவுன்சிலர்கள் அவருக்கு எதிராக வாக்களித்தனர்
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 6 இடங்களும் காங்கிரஸ் 1 இடமும் அதிமுக 3 இடங்கள் 4 இடங்களில் சுயேட்சைகள் பாமக 1 இடமும் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் பேரூராட்சித் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது. ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் பதவி திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் பேரூராட்சித் தலைவர் அருள்ராஜின் மனைவி செல்வமேரி அருள்ராஜ் திமுக கூட்டணி சார்பில் பேரூராட்சி தலைவர் பதவிக்கு அறிவிக்கப்பட்டு உள்ளார்.
ஆனால் ஸ்ரீபெரும்புதூரில் திமுக 6 இடங்களை கைப்பற்றியுள்ளதால் பேருராட்சி தலைவர் பதவியை கைப்பற்றி விடலாம் என உள்ளூர் திமுக நிர்வாகிகள் எதிர்ப்பார்த்து வந்தனர். இந்த நிலையில் திடீரென திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸுக்கு பேரூராட்சி தலைவர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளதால் திமுகவினர் அதிருப்தி அடைந்தனர். சுயேச்சை, பாமக என அனைத்து வெற்றி பெற்ற வேட்பாளர்களும் திமுக தலைமைக்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் தலைமை கழகம் காங்கிரசுக்கு ஸ்ரீபெரும்புதூர் சேர்மன் பதவியை ஒதுக்கி இருப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது.
காங்கிரசுக்கு ஆதரவு தெரிவிக்க முடியாது என சுயேச்சை மற்றும் பாமக உறுதியாய் இருக்கும் காரணத்தினால், திமுக தலைமையில் ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ் குமாரின் மனைவி சாந்தி சதீஷ்குமார் தலைமை அறிவித்த காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக வேட்பு மனுதாக்கல் செய்தார். இந்நிலையில் தேர்தல் நடைபெற்று வந்த நிலையில் திமுக சார்பில் போட்டியிட்ட சாந்தி சதிஷ் குமார் 11 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார் மொத்தம் 15 வாக்குகளில் செல்வமேரி அருள்ராஜ் 4 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் கட்சியினர் திமுகவினர் தங்களுக்கு துரோம் செய்துவிட்டதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.