70 வயது பாட்டி மீது மிளகாய் தூள் வீசி பாலியல் வன்கொடுமை.. கேரளாவில் இளைஞர் வெறிச்செயல்!
70 வயது மூதாட்டியை இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். அதோடு, வீட்டில் இருந்த தங்க நகைகளை திருடி சென்றுள்ளார்.
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் இம்மாதிரியான வெறிச் செயல்கள் அரங்கேறி வருகின்றன. இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கு கடந்தாண்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
கேரளாவை உலுக்கிய சம்பவம்: தற்போது, கொல்கத்தா மருத்துவருக்கு நேர்ந்த கொடூரம் தேசத்தின் ஒட்டுமொத்த மனசாட்சியையும் உலுக்கியுள்ளது. இந்த நிலையில், கேரளாவில் நடந்துள்ள மற்றொரு சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 70 வயது மூதாட்டியை இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார்.
ஆலப்புழா அருகே காயங்குளத்தில் அமைந்துள்ள மூதாட்டியின் வீட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கனகக்குன்னு பகுதியைச் சேர்ந்த தனேஷ் என்பவர் சனிக்கிழமை இரவு மூதாட்டி மீது மிளகாய்ப் பொடியை வீசி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "அவரிடம் இருந்து ஏழு சவரன் தங்கத்தை திருடி, நகைகளை விற்க முயன்ற போது இளைஞர் கைது செய்யப்பட்டார். கதவை வெளியில் இருந்து பூட்டிவிட்டு சென்றிருக்கிறார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரிப்பு: அவரது மொபைல் போனையும் எடுத்து சென்றிருக்கிறார். இதன் காரணமாக மூதாட்டியால் மற்றவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இன்று காலை அக்கம்பக்கத்தினர் அவரைக் கண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எங்களுக்குத் தகவல் தெரிவித்தனர். மூதாட்டி, தனியாக தங்கியிருப்பதை அறிந்த பிறகு, சதி திட்டம் தீட்டி குற்றத்தை செய்துள்ளார்" என்றார்.
சமீபத்தில், மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் 20 வயது இளம்பெண் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றத்தில் அவரது காதலனே ஈடுபட்டதாக கூறப்படுகிறது. வெட்டி கொலை செய்தது மட்டும் இன்றி ரயில் நிலையம் அருகே உள்ள புதரில் அந்த உடலை புதைத்தாகவும் கூறப்படுகிறது.
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பெரும்பாலும் அவர்களுக்கு தெரிந்தவர்களாலேயே நடத்தப்படுவதாக அதிர்ச்சி அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்த அறிக்கைக்கு வலுச்சேர்க்கும் விதமாக ஐநா தலைவர் கடந்தாண்டு அதிர்ச்சி தரவை பகிர்ந்திருந்தார்.