கரூரில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை... விவசாய நிலங்கள், வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்
கரூர் முழுவதும் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது.
கரூர் அருகே வேலாயுதம்பாளையம் பகுதியில் விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளுக்குள் புகுந்த மழை நீரால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிப்படைந்தனர். வாய்க்கால் சரியான முறையில் தூர்வாரப்படாததால் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் மழை நீர் புகுந்ததாக குற்றச்சாட்டு வைத்தனர்.
தென் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என தமிழக வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், கரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது.
இப்பகுதியில் உள்ள கோரைப்புல் , வாழை, தென்னை உள்ளிட்ட விவசாய நிலங்களிலும், சரியான முறையில் பாப்புலர் முதலியார் வாய்க்காலை தூர்வாரபடாததால் வாய்க்கால் செல்லும் நீர் வீடுகளுக்குள் வெள்ளம் போல் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக நேரில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், டி.என்.பி.எல் காகித ஆலையிலிருந்து வெளியேறும் கழிவு நீரை தடுக்க வேண்டும் என்றும், வாய்க்காலை சரியான முறையில் தூர்வார வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயி சுப்பிரமணியன் கூறுகையில், பாப்புலர் முதலியார் வாய்க்கால் முறையாக தூர்வார படவில்லை என்று மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. வாய்க்கால் சரியாக தூர்வாரப்படாத காரணத்தினால் தான் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. மழை காரணமாக பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் இருந்தது. காகித ஆடையில் இருந்து மழைப்பொழிவின்போது அதிக அளவில் வெளியேறும் கழிவு நீரால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுப்பணி துறை அதிகாரிகள் அலட்சியத்தின் காரணமாக சரியான முறையில் வாய்க்கால் தூர்வரப்படாதால் வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது” என குற்றச்சாட்டு வைத்துள்ளார்.