”தெரிந்தே புற்றுநோயை விற்காதீர்கள்” - கரூர் ஆட்சியர் பேச்சு
வணிகர்களாகிய நீங்கள் சொந்த உழைப்பில் முன்னேறும் தன்னம்பிக்கை கொண்டவர்கள். நாம் மனித நேயத்துடன் நடந்துகொள்வேண்டும் என்றார்
கரூர் மாவட்ட உணவு பாதுகாப்புதுறை மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் பிரபுசங்கர் தலைமையில், அரசால் தடைசெய்யப்பட்டுள்ள புகையிலை, குட்கா, பான்மசாலா ஒழிப்பு குறித்து வணிகர்களுடன் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, புகையிலை, பான்மசாலா, குட்கா போன்ற பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் புற்றுநோய் ஏற்படுகின்றது. குறிப்பாக வாய்ப் புற்றுநோய் உருவாகின்றது. வணிகர்களாகிய நீங்கள் சொந்த உழைப்பில் முன்னேறும் தன்னம்பிக்கை கொண்டவர்கள். நாம் மனித நேயத்துடன் நடந்துகொள்வேண்டும். தெரிந்தே பிறருக்கு புற்று நோயை விற்பதற்கு வணிகர்கள் ஒரு காரணமாகிவிடக்கூடாது. கரூர் மாவட்டத்தில் எந்த வகையிலும் அரசால் தடைசெய்யப்பட்டுள்ள புகையிலை, குட்கா, பான்மசாலா போன்ற பொருட்கள் விற்பனைக்கு வருவதை வணிகர்கள் அனுமதிக்கக்கூடாது. வாடிக்கையாளர்களே வணிகர்களின் சொத்து. அத்தகைய வாடிக்கையாளர்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதை எந்த ஒரு நியாயமான வணிகரும் அனுமதிக்கமாட்டார்கள்.
தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்பதில்லை என்ற உறுதியினை அனைத்து வணிகர்களும் ஏற்க வேண்டும். அதே நேரத்தில், பிற நபர்களால் தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்த தகவல் அறிந்தால் உடனடியாக உணவுப்பாதுகாப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தங்களது புகாரினை, உணவுப் பாதுகாப்பு துறையின் வாட்ஸ்அப் புகார் எண் 94440 42322 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.
கரூர் மாவட்டம் அரசால் தடைசெய்யப்பட்ட பொருட்கள் இல்லாத மாவட்டமாக உருவாக்கிட அனைத்து வணிகர்களும் தங்களின் முழு ஒத்துழைப்பினை அளிக்க வேண்டும் என தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, அரசால் தடைசெய்யப்பட்டுள்ள புகையிலை, குட்கா, பான்மசாலா ஒழிப்பு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வாசிக்க அனைத்து வணிகர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் கலைவாண, கரூர் நகர துணை காவல் கண்காணிப்பாளர் தேவராஜ் மற்றும் வணிகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
கரூரில் நாள்தோறும் பல்வேறு கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, தொடர்ந்து 2 நாட்களாக நாள்தோறும் 5 கிலோ வீதம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்த நிலையில் அதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வின்போது முதல் தடவை கடைகளில் சோதனையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை பறிமுதல் செய்ததுடன் தகுந்த அபராதம் விதிக்கப்படும். மீண்டும், இரண்டாவது தடவை தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை விற்க நேரிட்டால் தக்க நடவடிக்கை பாயும் என கரூர் மாவட்ட வணிக நிறுவன சங்கத்திற்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இணைந்து கரூர் மாவட்டத்தில் குட்கா பான்மசாலா போன்ற தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களின் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.