Kallakurichi : நெஞ்சோடு விலங்கியல் புத்தகம்.. ஊர்மக்கள் கண்ணீர்.. அடக்கம் செய்யப்பட்டது மாணவியின் உடல்!
கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகேயுள்ள கனியாமூரில் செயல்படும் தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி சட்டப்போராட்டம் நடத்திய அவரது பெற்றோர் நீதிபதியின் அறிவுறுத்தலுக்குப் பிறகு உடலை பெற்றுக்கொள்வதாக நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து காலை 6 மணி முதல் 7 மணிக்குள் மாணவியின் உடலை பெற்றுக்கொள்ளுமாறும், நாளை மாலைக்குள் இறுதிச்சடங்குகளை முடிக்கும்படியும் நீதிபதி சதீஷ்குமார் தெரிவித்தார்.
அதன்படி இன்று காலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவனையில் ஸ்ரீமதியின் பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக மாணவியின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் மாவட்ட ஆட்சியர் ஷவரன் குமார் ஜடாவத், வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி, மத்திய மண்டல ஐஜி சந்தோஷ்குமார் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.இதனையடுத்து மாணவியின் உடல் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்பட்டு மாணவியின் உடல் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
முன்னும், பின்னும் காவல்துறை வாகனங்கள் பாதுகாப்போடு சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் சிறிது நேரத்தில் விபத்தில் சிக்கியது. இதில் வாகனத்தின் முன்பகுதியில் சிறிது சேதம் ஏற்பட்டது. இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் வாகனம் பிரேக் போட்ட போது முன்னால் சென்று கொண்டிருந்த போலீஸ் வாகனம் மீது மோதியது. இதனைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் இறங்கி விசாரணை நடத்தினர். பின்னர் சிறிது நேரத்தில் கழித்து அங்கிருந்து கிளம்பிய ஆம்புலன்ஸ் வாகனம் மாணவியின் சொந்த ஊருக்கு வந்து பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மாணவியின் சொந்த ஊரான பெரிய நெசலூரில் ஏராளமான பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். இவர்களுக்கு அடுத்தபடியாக உயிரிழந்த மாணவியின் உடலுக்கு அமைச்சர் சி.வி. கணேசன், ஸ்ரீதர் வாண்டையார் உள்ளிட்டவர்களும் அஞ்சலி செலுத்தினர்.
சரியாக காலை 11.40 மணிக்கு மாணவியில் உடல் அவரது சொந்த ஊரான பெரியன்நெசலூரில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. மாணவியின் குடும்ப முறைப்படி எரிக்க வேண்டிய நிலையில் தொடர்ந்து மர்மம் நீடிப்பதால் வழக்கறிஞரின் ஆலோசனைப்படி புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டு குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இறுதி ஊர்வலத்தில் மாணவி விரும்பி படிக்கும் விலங்கியல் புத்தகத்தை மாணவியின் உடலோடு கட்டி வைத்தனர். அதே புத்தகத்துடனே மாணவி அடக்கம் செய்யப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்