Kaanum Pongal 2025: களைகட்டிய காணும் பொங்கல்! சுற்றுலா தளங்களில் குவியும் மக்கள் - சென்னையில் போக்குவரத்து மாற்றம்
தமிழ்நாடு முழுவதும் இன்று காணும் பொங்கல் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மக்கள் அதிகம் கூடும் சுற்றுலா தளங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழர்களின் முதன்மை பண்டிகையான தைத் திருநாளாம் பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. உழவுக்கும், வாழ்விற்கும் உறுதுணையாக திகழும் கால்நடைகளை போற்றும் விதமாக மாட்டுப் பொங்கல் நேற்று கொண்டாடப்பட்டது.
இன்று காணும் பொங்கல்:
இந்த நிலையில், இன்று தமிழ்நாடு முழுவதும் காணும் பொங்கல் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல் முடிந்து வரும் அடுத்த நாள் காணும் பொங்கலாக கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கல் என்றாலே மக்கள் சுற்றுலா தளங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கூடி ஒருவருக்கு ஒருவர் அன்பையும், வாழ்த்துகளையும் பரிமாறிக் கொள்வார்கள். மேலும், உற்றார் உறவினர்களுடன் கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களுக்குச் சென்று தங்களுக்கு பிடித்தவாறு நேரத்தைச் செலவிடுவார்கள்.
மெரினாவில் பலத்த பாதுகாப்பு, சிறப்பு பேருந்துகள்:
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னையில் காணும் பொங்கல் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரையில் இன்று ஆயிரக்கணக்கில் மக்கள் குவிவார்கள். இதையடுத்து, மெரினா கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் இன்று 500 சிறப்பு பேருந்துகள் மாநகராட்சி சார்பில் இயக்கப்பட உள்ளது. மெரினா கடற்கரை மட்டுமின்றி வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, கோவளம், மாமல்லபுரம் ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகளவு காணப்படும். அதேபோல, தனியார் வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதும். பலர் குடும்பங்களுடன் ஆன்மீக தலங்களுக்குச் சென்று வழிபடுவதும் வழக்கம் ஆகும்.
தயார் நிலையில் சுற்றுலா தளங்கள்:
சென்னையில் காணும் பொங்கல் கொண்டாட்டத்திற்கு மக்கள் மெரினா கடற்கரைக்குச் செல்வது போல மற்ற மாவட்டங்களில் மக்கள் காணும் பொங்கல் கொண்டாட அவர்களின் பகுதிகளில் உள்ள ஆற்றங்கரை உள்ளிட்ட நீர்நிலைகளுக்குச் செல்வது வழக்கம்.
திருச்சி காவரி ஆற்றுக்கரை, கல்லணை உள்ளிட்ட பகுதிகளில் இன்று மக்கள் கூட்டம் அதிகளவு காணப்படும். தமிழ்நாடு முழுவதும் இன்று காணும் பொங்கலை முன்னிட்டு சுற்றுலா தளங்கள் அதற்கான தயார் நிலையில் உள்ளன. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து மாற்றம்:
காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை செல்பவர்களின் வசதிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கலங்கரை விளக்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில் இடதுபுறமாக திருப்பிவிடப்பட்டு, பாரதி சிலை, பெல்ஸ் சாலை, விக்டோரியா விடுதி வழியாக வாலாஜா சாலை வழியாக அனுமதிக்கப்படுவார்கள். இன்று விக்டோரியா சாலை ஒரு வழிப்பாதையாக அனுமதிக்கப்படும்.
கண்ணகி சிலையில் இருந்து பாரதி சிலையை நோக்கிச் செல்லும் வாகனங்கள் ஒருவழிப் பாதையாக செயல்படும்.காமராஜர் சாலையில் இருந்து கலங்கரை விளக்கம் நோக்கி வரும் கனரக மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் 1 மணி முதல் 10 மணி வரை அனுமதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.