புவி மீது அக்கறை... தஞ்சை மாணவியின் சிறப்பான கண்டுபிடிப்பு
உலகில் மனித குலத்துக்கு மட்டுமின்றி அனைத்து ஜீவராசிகளுக்கும் கடல்களின் முக்கியத்துவம் இன்றியமையாத ஒன்றாகும் அந்த வகையில் கடற்கரையையும், கடல்சார் வளங்களையும் பராமரிப்பது மிக முக்கியமானது.

தஞ்சாவூர்: கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய தேவையற்ற நச்சுப் பொருட்களை சேகரித்து அழிக்கும் மின்கல இயந்திரத்தை தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியை சேர்ந்த புள்ளியியல் துறை மாணவி கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். இந்த சாதனமானது கடலில் கப்பல்களில் கொண்டு செல்லப்படும் எண்ணெய் கசிவு ஏற்பட்டு கடலின் மேற்புறத்தில் தேங்கி நிற்பதை உடனடியாக அகற்றவும் பயன்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகில் மனித குலத்துக்கு மட்டுமின்றி அனைத்து ஜீவராசிகளுக்கும் கடல்களின் முக்கியத்துவம் இன்றியமையாத ஒன்றாகும் அந்த வகையில் நாம் கடற்கரையையும், கடல் சார் வளங்களையும் பராமரிப்பதும், பாதுகாப்பது மிக முக்கியமானது. நம் நாடு மூன்று பக்கமும் கடல் சூழ்ந்த தீபகற்ப பகுதியாகும். நமது நாட்டில் சுமார் 8,000 கிலோ மீட்டர் தூரம் நீளமுள்ள கடற்கரை பரப்பு உள்ளது.
இந்தியா மட்டுமல்லாது உலகமே 71% நீரால் சூழப்பட்டது தான் இதில் 97 சதவீதம் கடல். தன்னகத்தே ஏராளமான கடல்வாழ் உயிரினங்களை கொண்டுள்ளது. நமக்கு எப்படி தரைப்பகுதி வாழ்விடமாக அமைந்துள்ளதோ அதேபோல்தான் கடல் தன்னுள் ஏராளமான உயிரினங்களை கொண்டுள்ளது. கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பதும் நமது தலையாயக் கடமை தான். மீன், ஆமைகள் போன்ற சிறிய உயிரினங்கள் முதல் சுறாக்கள், திமிங்கலம் போன்ற மிகப் பெரிய உயிரினங்கள் வரை வாழும் இடமாக கடல் அமைந்துள்ளது.
சுற்றுலா, திருவிழா உட்பட பண்டிகை காலங்களில் கடற்கரைகளில் கூடி மகிழும் நாம் அங்கு வீசியும் பிளாஸ்டிக் பொருட்கள் கடல் அலையில் அடித்து செல்லப்பட்டு கடல் வாழ் உயிரினங்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதற்கு பல்வேறு உதாரணங்களை கூறலாம். இந்த நிலை இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து வருகிறது. காற்று மாசு போல், கடல் மாசும் உயிரினங்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் ஒன்றாக உள்ளது.கடல்கள் மற்றும் நீ நிறைந்த பகுதிகளில் வாழும் உயிரினங்கள் திடீர் திடீரென செத்து மிதப்பதற்கான முக்கிய காரணங்கள் கடலில் கழிவு நீர் கலப்பது, பிளாஸ்டிக் குப்பைகள். சரக்கு கப்பல்களில் எடுத்துச் செல்லப்படும் எண்ணெய் கசிவாகியோ, கவிழ்ந்தோ கடலில் கலப்பது போன்ற பல்வேறு காரணிகளை கூறலாம்.
சமீபத்திய ஆண்டுகளில், கடல் மாசுபாட்டின் அளவு மற்றும் தாக்கம் அதிகரித்துள்ளது உடனடி கவனம் தேவைப்படும் ஒரு அழுத்தமான உலகளாவிய பிரச்சினையாக, கடல் மாசுபாடு உள்ளது. நச்சு உலோகங்கள், பிளாஸ்டிக்குகள், பெட்ரோலிய கழிவுகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பாசிப் பூக்கள் போன்ற உயிரியல் அச்சுறுத்தல்களின் சிக்கலான கலவைதான் கடல் மாசுபாடு. நமது கடல்களில் 75 முதல் 199 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 33 பில்லியன் பவுண்டுகள் பிளாஸ்டிக் கடல் சூழலில் நுழைகிறது
2050-ல் கடலில் உள்ள அனைத்து மீன்களையும் விட பிளாஸ்டிக் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடல் மாசுபாட்டால் கிட்டத்தட்ட 1,000 வகையான கடல் விலங்குகள் பாதிக்கப்படுகின்றன. மேலும் 500 க்கும் மேற்பட்ட இடங்கள் கடல் வாழ் உயிரினங்கள் இருக்க முடியாத இறந்த மண்டலங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடலில் பிளாஸ்டிக்கால் பாதிக்கப்பட்ட 17% உயிரினங்கள், இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் சிவப்புப் பட்டியலில் ஆபத்தான உயிரினங்களின் பட்டியலில் உள்ளன. இந்த கடல் மாசுபாடு மீன்கள், டால்பின்கள், கடல் ஆமைகள், கடல் பசுக்கள், கடல் பறவைகள், நண்டுகள் மற்றும் மற்ற உயிரினங்கள் அவற்றின் இயல்பான இயக்கங்கள் பாதிக்கப்பட்டு உயிரை இழக்க காரணிகளாக அமைகின்றன. எண்ணெய் கசிவினால் கடல்வாழ் உயிரினங்களுக்கு தேவையான உணவு மற்றும் ஆக்சிஜன் கிடைப்பது தடைப்பட்டு அவை இறக்கும் சூழல் உருவாகிறது. இந்த நிலையை மாற்ற கடல்வாழ் உயிரினங்கள் அவற்றின் இயல்பான வாழ்க்கையை வாழ தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி சேர்ந்த புள்ளியியல் துறை மாணவி ர. சோனா அகல்யா (20) கண்டுபிடித்துள்ள மின்கல சாதனம் கவன ஈர்ப்பை பெற்று பாராட்டுக்களை குவித்து வருகிறது
பிளாஸ்டிக் கழிவுகள் முதல் என்னை கசிந்து ஏற்படும் மாசு போன்றவற்றை முழுமையாக அகற்ற ஒரு சாதனத்தை கண்டுபிடித்துள்ளார். படகு போன்ற அமைப்பில் உள்ளது இந்த மின்கலம். கடலில் எண்ணெய் கப்பல்கள் கவிழ்ந்து எண்ணெய் கடற் பரப்பில் மிதக்கும் போது அதை அப்புறப்படுத்துவதை மிகவும் முடியாத காரியம். எளிதான காரியம் அல்ல. இதனை எளிமையாக செயல்படுத்த மாணவி சோனா அகல்யா கண்டுபிடித்துள்ள மின்கலன் மிகவும் உதவிகரமாக உள்ளது. நான்கு புறமும் சக்கரங்கள் அமைக்கப்பட்டு படகு அமைப்பில் காணப்படும் இந்த மின் கலத்துடன் எக்ஸலேட்டர் வடிவில் அமைக்கப்பட்டுள்ள மிக நுண்ணிய அமைப்பு கொண்ட வலை மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மின்மோட்டார் இந்த மின்கலத்துடன் இணைந்துள்ளது. இது கடற் மேற்பரப்பில் எண்ணெய் கசிவை உறிஞ்சி வலை போன்ற அமைப்பு வாயிலாக அந்த மின்கலத்தில் அமைக்கப்பட்டுள்ள சேமிப்பு தொட்டியில் எண்ணையை கொட்டுகிறது. மிக எளிதாக இயக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மின்கலன் மிக வேகமாக இயங்குவதற்கு மின்மோட்டார்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மிகவும் எளிமையாக கடற்பரப்பில் உள்ள எண்ணெய் கசிவை உறிஞ்சி எடுக்க முடிகிறது.
மேலும் கடலில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை இந்த எக்ஸலேட்டர் அமைப்பு முழுமையாக தன்னுள் இழுத்து தனி சேமிப்பு கலனில் கொண்டு போய் சேர்க்கிறது.; இவ்வாறு சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சிக்கு பயன்படுத்தலாம். இந்த கருவை மிக குறைந்த செலவில் அதாவது ஒரு 650-க்குள் வடிவமைத்து தஞ்சாவூரில் நடந்த புத்தகக் கண்காட்சியில் அறிவியல் அரங்கில் காட்சிப்படுத்தி செயல்முறை விளக்கம் செய்து காட்டி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து பாராட்டுகளை பெற்றார்.
குறித்து மாணவி சோனா அகல்யா கூறுகையில் கடல் வாழ் உயிரினங்கள் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் எண்ணெய் கழிவுகளால் இறப்பது மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகும். இதற்காக இந்த கழிவுகள் அகற்றும் மின் கலப்பை எனது கல்லூரி முதல்வர் ஜான் பீட்டர் வழிகாட்டுதலில் துணைத் தலைவர் அனுசுயா ஆலோசனைகளின் படி கண்டுபிடித்தேன். மிக எளிய இந்த கருவியை மாதிரியாக கொண்டு பெரிய அளவில் வடிவமைக்கும் பொழுது கடல் பரப்பு மிகவும் தூய்மை யாக மாறும் என்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளது. எனது இந்த கண்டுபிடிப்பிற்கு எனது தந்தை ரமேஷ் குமார், அம்மா வசந்தி ஆகியோர் ஊக்கம் அளித்தனர். தற்போது சிறிய அளவில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த கருவியை பெரிய அளவில் உருவாக்கினாள் கடல் மாசுபாட்டை தவிர்க்கலாம். மேலும் வரும் காலத்தில் இதனை மேலும் நவீனப்படுத்தி கடல் மாசுபாட்டை தவிர்க்க என்னால் முயன்ற முயற்சிகளை மேற்கொள்வேன். இந்த கண்டுபிடிப்பை செயல்முறை படுத்த எனக்கு எனது கல்லூரி தோழிகள் உதவிகள் செய்தனர் என்றார்.