Fisherman: மீன் பிரியர்களுக்கு நற்செய்தி... முடிவுக்கு வந்த 61 நாள் மீன்பிடி தடைக்காலம்.. குறையும் மீன் விலை .. முழு விவரம்..
61 நாள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து இன்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
61 நாள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து இன்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
கடல்வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இக்காலக் கட்டத்தில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் என்பதால் மீன்வளத்தை பாதுகாக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில் விசை படகுகள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டும். திருவள்ளூர் தொடங்கி கன்னியாகுமரி வரை மீனவர்கள் இந்த காலத்தில் மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள். ஏப்ரல் முதல் ஜூன் வரை மீனவர்கள் தங்கள் விசை படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுவார்கள்.
இந்த ஆண்டும் ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது. சுமார் 61 நாட்களுக்கு பின் இன்று மீன்வர்கள் படகுகளுக்கு பூஜை போட்டு கடலுக்கு சென்றனர், மீன்பிடி தடை காலத்தின் போது மீனவர்கள் குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே சென்று மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டது. மீன்பிடி தடை காலத்தில் ஆயிரக்கணக்கான விசை படகுகள் கடலுக்கு செல்லாமல் மீன்பிடித் துறைமுகம் மற்றும் மீன்பிடி இறங்குதளங்களில் நிறுத்தப்பட்டு இருந்தது.
படகுகள் கடலுக்கு செல்லாது காரணத்தால் கடந்த 2 மாதங்களாக மீன் வரத்து குறைந்தது. அதேபோல் ஆழ்கடலில் கிடைக்கும் மீன்கள் கிடைக்காமல் இருந்தது. இதனால் மீன் விலை கடுமையாக உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. மேலும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து மீன் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. பொதுவாக வஞ்சிரம், வவ்வால், காலா, பன்னை, டூனா, டைகர் இறால், புளூ கிராப், மட் கிராப், லாப்ஸ்டர், கனவா, திருக்கை ஆகிய ஆழ்கடல் மீன்கள் இரண்டு மாதங்களாக கிடைக்காமல் இருந்தது.
இன்று மீன்பிடி தடைக்காலம் முடிவுக்கு வந்த நிலையில் இனி வரும் வாரங்களில் மீன் வரத்து அதிகரிக்கும் என்றும் ஆழ்கடல் மீன்கள் அனைத்தும் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மீன் விலையும் படிப்படியாக குறையும்.
சென்னை காசிமேடு, நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ஒருவாரம் கடலில் தங்கி மீன்பிடிக்க தேவையான உணவு பொருட்கள் மற்றும் மீன்களை பதப்படுத்த ஐஸ் கட்டிகள், டீசல், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் படகுகளில் வைத்துள்ளனர். அதே சமயம் குமரி மாவட்ட மீனவர்கள் பிபர்ஜாய் புயல் காரணமாக மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் அரபிக் கடல் பகுதியில் ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனே கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.