PTR Meets CM Stalin: முதலமைச்சர் மு.க ஸ்டாலினுடன் நிதியமைச்சர் பி.டி.ஆர் திடீர் சந்திப்பு.. காரணம் என்ன?
சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில், முதலமைச்சர் மு.க ஸ்டாலினை, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசினார்.
சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில், முதலமைச்சர் மு.க ஸ்டாலினை, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசினார். நாளை மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், இது வழக்கமான சந்திப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாடு அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட உள்ளதாக செய்திகள் பரவி வந்தது. கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் திமுகவின் மூத்த தலைவர்களுக்கு முக்கிய அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டது.
ஆட்சி தொடங்கியதில் இருந்தே பல்வேறு அமைச்சர்கள் சர்ச்சையில் சிக்கியதால் மக்கள் அவர்கள் மீது அதிருப்தியில் இருந்ததாக செய்திகள் பரவி வந்தது. அதிலும், குறிப்பாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ஆடியோ விவகாரத்தில் சிக்கிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் பொன்முடி உள்ளிட்டவர்கள் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கினர்.
இதன் காரணமாக மே மாதத்தில் சில முக்கிய அமைச்சர்களில் பதவிகள் பறிக்கப்பட இருப்பதாகவும், புதுமுகங்கள் சிலருக்கு அமைச்சராகும் வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது.
ஆடியோ விவகாரத்தில் பதவி இழப்பா..? பிடிஆர்- முதலமைச்சர் சந்திப்பு ஏன்?
கடந்த வாரம் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, நிதியமைச்சர் பிடிஆர் குறித்து வெளியிட்ட ஆடியோ பரபரப்பை சந்தித்தது. பிடிஆர் பேசியதாக அந்த ஆடியோவில், “ முதலமைச்சர் முக ஸ்டாலிலின் மகன் உதயநிதி மற்றும் அவரது மருமகன் சபரீசன் ஆகியோர் குறுகிய காலத்தில் ரூ. 30,000 கோடி சேர்த்துள்ளன. “ என்று தெரிவித்தார்.
மேலும் மற்றொரு குறிப்பில், “ பாஜகவில் மட்டுமே ’ஒரு நபர் ஒரு பதவி’ என்ற கொள்கை உள்ளது. திமுகவில் அப்படி எதுவும் இல்லை” என தெரிவித்தார்.
இதையடுத்து, இந்த ஆடியோவுக்கு மறுப்பு தெரிவித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இரண்டு பக்கத்திற்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், இந்த ஆடியோவானது முற்றிலும் ஜோடிக்கப்பட்டது. இதை கொண்டு என்னையும், முதலமைச்சர் முக ஸ்டாலினையும் பிரிக்க பார்க்கிறார்கள். ஆனால், அது முடியாது. “ என தெரிவித்தார்.
மேலும், தற்போது வரை இந்த ஆடியோ தொடர்பாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனோ அல்லது திமுகவினரோ காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யவில்லை. இதனால் இந்த ஆடியோ உண்மையாக இருக்க கூடுமோ என்ற சந்தேகமும் எழுகிறது.
இந்த சூழலில்தான், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை வேறு இலாக்களுக்கு மாற்றப்படவோ அல்லது பதவி பறிக்கபடவோ வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதன் காரணமாகவே முதலமைச்சர் ஸ்டாலினை அமைச்சர் பிடிஆர் சந்தித்தாக கூறப்படுகிறது.