திமுக எம்.பி. ஆ.ராசாவின் மனைவி மறைவு: அரசியல் கட்சியினர் இரங்கல்
நீண்டகாலமாக புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மறைந்தார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச்செயலாளருமான ஆ.ராசாவின் இணையர் பரமேஸ்வரி இன்று காலமானார். கடந்த ஆறு மாதகாலமாகவே தீவிர புற்றுநோயுடன் போராடிக் கொண்டிருந்தவரின் உடல்நிலை கடந்த சில வாரங்களாக மோசமடைந்தது.
இந்த நிலையில் சென்னை ரேலா மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை பிரிவு நிபுணர்கள் மற்றும் புற்றுநோய் நிபுணர்கள் அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. ஆ.ராசாவின் மனைவி மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், பரமேஸ்வரியின் குடும்பத்தைச் சந்தித்து அவரது உடல்நிலை குறித்து அண்மையில் கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.