வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 7 பேர் மரணம் - ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமா?
4 பேர் கொரோனா வார்டிலும், 3 பேர் அவசர சிகிச்சை வார்டிலும் சிகிச்சை பெற்றுவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த 7 பேர் ஆக்சிஜன் இணைப்பு துண்டிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், 4 பேர் கொரோனா வார்ட்டிலும், 3 பேர் அவசர சிகிச்சை வார்டிலும் சிகிச்சைப் பெற்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இறந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. நோயாளிகளுக்கு ஆக்சிஜன் விநியோகத்தை உறுதிசெய்ய அதிகாரிகள் தவறியதாகவும், மருத்துவமனையின் மெத்தனப்போக்கால் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
இறந்தவரின் உறவினர் ஒருவர் இதுகுறித்து கூறுகையில், "ஆக்சிஜன் விநியோகம் சுத்தமாக இல்லை. நாங்கள் மருத்துவரிடம் சென்று முறையிட்டோம். உதவியாளர் பிரச்சனையை சரிசெய்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்" எனக் கூறினார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் பதில்:
ஆக்சிஜன் தடைபட்டதால் மரணம் என்னும் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் முற்றிலும் மறுத்துள்ளார். இது குறித்து அவர் பேசும் போது" மருத்துவ உள்கட்டமைப்பு குறைபாடுகள்தான் உயிரிழப்புக்கு காரணம் என்பது முற்றிலும் தவறானது. நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக செயலிழப்பு, இருதய நோய்கள் போன்ற அதிக ஆபத்து நிறைந்த இணை நோய்களை கொண்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.
மேலும், "கொரோனா வார்டில் மட்டும் 50-க்கும் மேற்ப்பட்டோர்களின் சிகிச்சை மருத்துவ ஆக்சிஜனை சார்ந்துள்ளது, இதர அவசர பிரிவில் உள்ள பலரின் சிகிச்சையும் மருத்துவ ஆக்சிஜனை சார்ந்துதான் உள்ளது . ஆக்சிஜன் விநியோகம் தடைபட்டால் இது அனைவருக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்" என்றும் தெரிவித்தார். இதுகுறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இதனிடையே, மருத்துவ கல்வி இயக்குநர் (டி.எம்.இ) நாராயணபாபு , வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உயிரிழப்பு தொடர்பான விசாரணையை மேற்கொள்வர் என தமிழக சுகாதார துறை செயலளார் ஜே. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், " கொரோனா நோய்த்தொற்று இரண்டாம் கட்டமாகத் தீவிரமாகப் பரவிவரும் சூழலில், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையில்லாமல் நாடு முழுவதும் கிடைக்கச் செய்யவேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 பேர் ஆக்சிஜன் தடைபட்டதால் மரணமடைந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இதுகுறித்து விரிவான விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். எனினும், முன்னெச்சரிக்கையாக ஆக்சிஜன் இருப்புநிலை, தேவை குறித்து ஏன் ஆய்வு செய்யப்படவில்லை என்ற கேள்வி எழுகிறது. வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கும் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது.
ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு உரிய ஏற்பாடுகள் செய்யவேண்டும். கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ள அரசு, தடுப்பூசி போடுவது, பரிசோதனைகளை அதிகரிப்பது, நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்குவது, ஊட்டச்சத்து உணவு தானியங்கள் இலவசமாக வழங்குவது, ரொக்கப் பண வசதி செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள தீவிர கவனம் செலுத்தவேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு மத்திய, மாநில அரசுகளையும், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறையினையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது" என்று முத்தரசன் தெரிவித்தார்.