CM Stalin: ஸ்பெயினில் இருந்து வந்ததும் தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் எழுதிய முதலும் முக்கியமான கடிதம்!
ஸ்பெயின் பயணம் வெற்றிகரமாக அமைந்ததுபோல, தேர்தல் களத்தில் ‘இந்தியா’வின் வெற்றியும் அமையும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், கடந்த ஜனவரி 27ஆம் தேதி ஐரோப்பிய நாடான ஸ்பெயினுக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், இன்று காலை சென்னை திரும்பினார். இந்த நிலையில், ஸ்பெயின் பயணம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.
பயணம் வென்றது! களமும் வெல்லட்டும்!
அதில், ”ஸ்பெயின் நாட்டில் தரையிறங்கிய மறுநாளே முதலீட்டாளர் சந்திப்பிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அந்நாட்டின் முக்கியமான தொழில்நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் வருகை தந்திருந்தனர். அவர்களை வரவேற்றுப் பேசிய தமிழ்நாடு அரசின் தொழில் - முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தம்பி டி.ஆர்.பி.ராஜா, சென்னையில் ஜனவரி 7, 8 ஆகிய நாட்களில் உலகத் தரத்துடன் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் பல்வேறு நாடுகளின் புகழ்பெற்ற நிறுவனங்களுடன் போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் 6 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு தமிழ்நாட்டுக்குக் கிடைக்கவிருப்பதை எடுத்துரைத்து, நமது மாநிலத்தில் உள்ள தொழிற்கட்டமைப்புகளை விளக்கி, ஸ்பெயின் நாட்டு நிறுவனங்களும் தமிழ்நாட்டில் அதிகளவில் முதலீடுகளைச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
முதலீட்டாளர் சந்திப்பிற்கு வந்திருந்த நிறுவனத்தினர் பலரின் முகங்களிலும் நம்பிக்கை பளிச்சிட்ட நேரத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் உங்களில் ஒருவனான நான் பேசத் தொடங்கினேன். “ஸ்பெயின் மக்களைப் போலவே தமிழர்களும் தங்கள் மொழி மீது மிகுந்த பாசம் கொண்டவர்கள்.
”வரலாறு இல்லாத கூட்டம் வரலாற்றை திரிக்கும்”
பனி மூட்டத்தை விலக்கிக் கொண்டு சூரியக் கதிர்கள் வெளிச்சத்தைப் பாய்ச்சும் ஸ்பெயின் நாட்டின் அதிகாலைப் பொழுதினைப் போல, தமிழ்நாட்டின் தொழில்துறையில் முன்பு சூழ்ந்திருந்த இருளும் பனியும் விலகி, வெளிச்சக் கதிர்கள் கடந்த இரண்டரை ஆண்டுகால திராவிட மாடல் அரசின் அயராத முயற்சியினால் பாயத் தொடங்கியிருக்கின்றன. வரலாற்றை ஒவ்வொரு தலைமுறைக்கும் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும். நம்மிடம் பெருமைமிகு வரலாறு உண்டு. நாம் அதனைச் சொல்லத் தவறியதால், வரலாறு இல்லாத ஒரு கூட்டம், நம் வரலாற்றைத் திரிக்கும்.
பண்பாட்டைச் சிதைக்கும். மொழி மீது ஆதிக்கம் செலுத்த நினைக்கும். வதந்திகளைப் பரப்பும். அவதூறுகளால் அரசியல் பிழைப்பு நடத்தும். உண்மை வரலாற்றை இளந்தலைமுறையினர் உணர்ந்துகொண்டால்தான், வரலாற்றைச் சிதைக்க நினைக்கும் வதந்தியாளர்களை, அவர்கள் தங்களின் வாக்குரிமையால் விரட்டி அடிப்பார்கள். அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் ஆபத்து நேராமல் தடுப்பார்கள்.
நம்முடைய உடனடி களப்பணி என்பது நாடாளுமன்றத் தேர்தல் களம்தான். அதற்காக அமைக்கப்பட்ட மூன்று குழுக்களுமே தங்களுடைய பணியைத் தொடங்கி, சிறப்பாகத் தொடர்வதை அறிந்துகொண்டேன். தோழமைக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு நடத்தும் குழு முதல் சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நல்லமுறையில் நிறைவு செய்துள்ளது.
"தேர்தல் களத்தில் ‘இந்தியா’ வின் வெற்றி அமையும்"
கழகத்தினரின் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கும் குழு ஒவ்வொரு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளையும் அழைத்து அண்ணா அறிவாலயத்தில் விரிவான ஆலோசனை நடத்தி, கள நிலவரத்தை எடுத்துரைத்து, வெற்றிக்கான வியூகத்தை வகுத்துத் தந்திருக்கிறது.
தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று மக்களைச் சந்தித்து அவர்களின் கருத்துகளைக் கேட்டு வருகிறது. தலைமையின் சொல்லை உத்தரவாக - கட்டளையாக ஏற்றுச் செயல்பட்டு வருவது மகிழ்வைத் தருகிறது. இது எப்போதும் தொடர வேண்டும்.
தனிப்பட்ட என்னுடைய - உங்களுடைய மகிழ்ச்சியைவிட, இந்தியாவின் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்தைத் தகர்த்து நாட்டைக் காப்பாற்றும் போது ஏற்படும் மகிழ்ச்சியே முதன்மையானது. ஸ்பெயின் பயணம் வெற்றிகரமாக அமைந்ததுபோல, தேர்தல் களத்தில் ‘இந்தியா’வின் வெற்றியும் அமையும். தமிழ்நாடு வளம் காணும். இந்தியாவின் ஜனநாயகம் காக்கப்பட்டால்தான் தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களின் வளர்ச்சியும் நிரந்தரமாக அமையும். அதற்கான களம் நம்மை அழைக்கிறது. ஆயத்தமாவோம்!" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.