Top 10 News Headlines: காதலால் ரூ.8 கோடி இழந்த 80 வயது முதியவர், நிலவில் அணுமின் நிலையம் - 11 மணி செய்திகள்
Top 10 News Headlines Today Aug 7th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

புதிய மருத்துவமனை
தாம்பரம் சானடோரியத்தில், ரூ.110 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட தலைமை மருத்துவமனை, ரூ.7 கோடியில் சிறப்பு பல்நோக்கு பல் மருத்துவமனை, ரூ.1 கோடியில் கட்டப்பட்டுள்ள பொது சுகாதார ஆய்வகம் ஆகியவற்றை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ராமதாஸ் மேல்முறையீடு
அன்புமணி கூட்டிய பொதுக்குழுவுக்கு தடையில்லை என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக நாளை காலை மேல்முறையீடு செய்கிறது பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு.
விடிய விடிய கிரிவலம்
திருவண்ணாமலையில் ஆடி மாத பௌர்ணமியான, நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் கொட்டும் மழையிலும் விடிய விடிய கிரிவலம் மேற்கொண்டனர்!
விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை வழியாக திருப்பதி செல்லும் பயணிகள் ரயிலில் பக்தர்கள் முண்டியடித்து ஏறியதால் பரபரப்பு
ரூ.65 லட்சம் காணிக்கை
மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.65.54 லட்சம் பணம், 108 கிராம் தங்கம், 4.098 கிலோ வெள்ளி, 13.950 கிலோ பித்தளை காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளன.
வருமான வரி மசோதாவை திரும்ப பெற்ற மத்திய அரசு
2025 பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய வருமான வரி மசோதாவை நேற்று மத்திய அரசு வாபஸ் பெற்றது. மசோதாவில் பல்வேறு மாற்றங்கள் செய்ய கோரிக்கை எழுந்த நிலையில், தேர்வுக் குழு வழங்கிய பெரும்பாலான பரிந்துரைகளை உள்ளடக்கிய புதுப்பிக்கப்பட்ட வருமான வரி மசோதாவின் புதிய பதிப்பு ஆகஸ்ட் 11ம் தேதி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிப்பு.
டெல்லியில் கனமழை
டெல்லியில் வெளுத்து வாங்கிய கனமழையால் முக்கிய சாலைகளில் தேங்கிய மழைநீர். இன்று டெல்லிக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது
காதல் மோகத்தில் ரூ.8 கோடி இழந்த 80 வயது முதியவர்
மும்பை : ஃபேஸ்புக்கில் 4 பெண்களிடம், காதல் வலையில் சிக்கி 80 வயது முதியவர் ஒருவர் 2 ஆண்டுகளில் ரூ.8.7 கோடி பணத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
2023 - 2025 வரை முதியவர் 734 பணப் பரிமாற்றங்கள் செய்துள்ளார். இதற்காக மருமகளிடம் ரூ.2 லட்சமும், மகனிடம் ரூ.5 லட்சமும் கடன் பெற்றுள்ளார். இதை சந்தேகித்து மகன் போலீஸில் புகார் அளிக்க, தான் சைபர் மோசடியில் சிக்கி ஏமாந்துவிட்டோம் என முதியவர் அறிந்துள்ளார்
புதினை சந்திக்கும் ட்ரம்ப்
ஆகஸ்ட் 15ம் தேதி ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு. அலாஸ்கா மாகாணத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ரோபாவால் விபத்து
சீனாவில் பெண் பயணி ஒருவரை ஏற்றிச் சென்ற ரோபோ டாக்ஸி, கட்டடத்திற்காக தோண்டப்பட்ட குழிக்குள் விழுந்து விபத்து. நல்வாய்ப்பாக காயங்களின்றி உயிர்தப்பிய பயணியை சுற்றி இருந்தவர்கள் ஏணியை கொண்டு மீட்டுள்ளனர். இதனால் ரோபோ டாக்சியின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளது.
நிலவில் அணுமின் நிலையம் அமைக்கும் நாசா
2030-க்குள் நிலவில் அணு மின் நிலையம் அமைக்க நாசா திட்டம். இத்திட்டம், நிலவில் மனிதர்கள் நிரந்தரமாக வாழும் சூழலை உருவாக்கும் இலக்கில் ஒரு பகுதியாகும். நிலவில் சூரிய சக்தி, பேட்டரிக்களால் மட்டுமே மின்சார தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்பதால், அணு மின் நிலையம் அவசியமானதாக கருதப்படுகிறது. எனினும், பூமியின் வளிமண்டலம் வழியே அணுக்கதிர் பொருட்களை ஏவுவது பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் கருத்து.





















