T.Rajendar hospitalised: மருத்துவமனையில் டி.ஆர்... மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறாரா?
சிகிச்சை முடிந்திருக்கும் நிலையில், அவர் முழுமையாக குணமடையாததால் மேல் சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா அழைத்துச் செல்லப்படலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது
இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர், அரசியல் கட்சி தலைவர் என பன்முகம் கொண்டவரான டி. ராஜேந்தர் உடல் நல பாதிப்பு காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமசந்திர மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இருதயத்தில் அடைப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அதனை அடுத்து, மருத்துவர்கள் மேற்கொண்ட சிகிச்சையில் அடைப்பு சீர் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அமெரிக்கா செல்கிறாரா டி.ஆர்?
சிகிச்சை முடிந்திருக்கும் நிலையில், அவர் முழுமையாக குணமடையாததால் மேல் சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா அழைத்துச் செல்லப்படலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், அவரது மனைவி உஷா, மகன்கள் சிம்பு, குறலரசன், மகள் இலக்கியா ஆகியோர் டி. ராஜேந்தருடன் அமெரிக்கா செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா செல்வதற்கான ஏற்பாடுகளை பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் செய்து வருவதாக டி.ஆரின் நெருங்கிய வட்டாரம் தகவல் தெரிவித்திருக்கிறது.
நெஞ்சு வலி காரணமாக சிகிச்சை மேற்கொண்ட டி.ஆருக்கு சிறுநீரக பாதிப்பு இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேல் சிகிச்சைக்காக அமெரிக்க மருத்துவரின் நேரம் கிடைக்கவில்லை என்றால் சிங்கப்பூர் அழைத்து செல்லபடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளிநாட்டிற்கு சென்று டி.ஆர் மருத்துவ சிகிச்சை எடுத்து கொள்ள இருப்பது உறுதியாகி உள்ளது.
டி.ஆரின் உடல் நலம் அபாய கட்டத்தில் இல்லை என்றாலும், தொடர் சிகிச்சை தேவைப்படுவதால் அவர் வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டி.ஆரின் உடல் நலம் குறித்து சிம்பு நாளை தகவல் தெரிவிக்க உள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது. 67 வயதான டி.ஆர் 1980-களில் இருந்து தமிழ் சினிமாவில் பணியாற்றி வருபவர், தனக்கென தனி முத்திரையை பதித்தவர். விரைவில் அவர் உடல் நலம் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என கோலிவுட்டில் வேண்டி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்