Special Bus: ஆடி பௌர்ணமி! சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை 50 ஏ.சி. பேருந்துகள் இயக்கம்!
Special Bus: ஆடி மாத பெளர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு நாளை கிளாம்பாக்கத்தில் இருந்து 50 ஏ.சி. பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
![Special Bus: ஆடி பௌர்ணமி! சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை 50 ஏ.சி. பேருந்துகள் இயக்கம்! aadi month pournami 50 AC Special bus chennai kilambakkam to thiruvannamalai Special Bus: ஆடி பௌர்ணமி! சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை 50 ஏ.சி. பேருந்துகள் இயக்கம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/18/5890082710a228e0ab4a1061e811af0f1721271731317102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னை, கோவை, மதுரை, நெல்லை போன்ற பெருநகரங்களில் பயிலும் மாணவர்கள் மற்றும் பணிபுரியும் இளைஞர்கள் வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம். அவர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு வார இறுதி நாட்களில் கூடுதலாக பேருந்துகளை இயக்குவது வழக்கம் ஆகும்.
சிறப்பு பேருந்துகள்:
இந்த சூழலில், நாளை, நாளை மறுநாள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, அரசு விரைவுப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
“ நாளை ( வெள்ளிக்கிழமை), 20ம் தேதி (சனிக்கிழமை மற்றும் பௌர்ணமி) மற்றும் 21ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 260 பேருந்துகளும், 20ம் தேதி 585 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.
திருவண்ணாமலைக்கு 50 ஏ.சி. பேருந்துகள்:
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு நாளை 45 பேருந்துகளும், 20ம் தேதி 45 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களுக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட 50 ஏ.சி. பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், நெல்லை, நாகர்கோயில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
முன்பதிவு:
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை 15 பேருந்துகளும், 20ம் தேதி (பௌர்ணமியை முன்னிட்டு) 15 பேருந்துகளும் என 30 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெளர்ணமியை முன்னிட்டு சென்னை மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 30 சிறப்பு பேருந்துகளும், 20ம் தேதி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து பயணிகள் சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலும் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், வெள்ளிக்கிழமையான நாளை 7 ஆயிரத்து 613 பயணிகளும், நாளை மறுநாள் 4 ஆயிரத்து 354 பயணிகளும், ஞாயிற்றுக்கிழமையில் 8 ஆயிரத்து 142 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)