Diwali 2025 Reservation: மக்களே.. இன்று தொடங்குகிறது தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு! எப்படி புக் செய்வது?
தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது. எப்படி முன்பதிவு செய்யலாம்? என கீழே காணலாம்.

தமிழ்நாட்டில் பொங்கலுக்கு நிகராக கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி ஆகும். பட்டாசு, புத்தாடைகள் என தீபாவளி பண்டிகை களைகட்டும். தீபாவளி பண்டிகையை மக்கள் தங்களது குடும்பங்களுடன் கொண்டாடவே விரும்புவார்கள். இதனால், வெளியூரில் வசிப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு ரயில், பேருந்துகளில் செல்வார்கள்.
தீபாவளி முன்பதிவு டிக்கெட்டுகள்:
நடப்பாண்டில் தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 20ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது. இன்று காலை 8 மணிக்கு இந்த முன்பதிவு தொடங்குகிறது. இதனால், பயணிகள் காலை முதல் வெளியூர் செல்வதற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
முன்பதிவு செய்வது எப்படி?
இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.irctc.co.in அல்லது அவர்களது செல்போன் செயலியில் உள்ளே செல்ல வேண்டும். பின்னர், உங்களுக்கென்று ஒரு கணக்கைத் தொடங்க வேண்டும். உங்கள் பயணம் தொடங்கும் நாள், எங்கிருந்து எங்கே வரை? ஆகியவற்றை நிரப்பி ரயிலை கண்டுபிடி என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்ய வேண்டும்.
அதில், ரயில்களின் பட்டியல் வரும். அதில் இருக்கை இருக்கிறதா? கட்டணம் எவ்வளவு? என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்ய வேண்டும். பின்னர், உங்கள் கட்டணத்திற்கு ஏற்ப இருக்கைகள் இருந்தால் இருக்கையை தேர்வு செய்து கொள்ளலாம்.
இதில் பயணியின் பெயர், வயது, பாலினம் உள்பட இதர தகவல்களை நிரப்ப வேண்டும். மேலும், தங்களது அடையாள அட்டை ஏதேனும் ஒன்றை கையில் வைத்திருக்க வேண்டும். கட்டணத்தை நீங்கள் வெற்றிகரமாக செலுத்திவிட்டால் உங்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்ததற்கான குறுஞ்செய்தி கிடைக்கும்.
பாெதுவாக, தீபாவளி முன்பதிவு டிக்கெட்டுகள் தொடங்கிய சில நிமிடங்களிலே இணையத்தின் வாயிலாகவே டிக்கெட்டுகள் விற்பனை முடிந்துவிடுகிறது. இதனால், நேரடியாக ரயில் நிலையத்திற்குச் சென்று டிக்கெட் எடுப்பவர்கள் டிக்கெட் கிடைக்காமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
சிறப்பு ரயில்கள்:
தீபாவளி பண்டிகை என்றாலே ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதும். குறிப்பாக, தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு லட்சக்கணக்கான பயணிகள் செல்வார்கள். அவர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும், ரயில்களும் இயக்கப்படுவது வழக்கம்.
சென்னை மட்டுமின்றி திருப்பூர், கோவை, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும் பயணிகள் கூட்டம் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல பயணிகள் கூட்டம் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் அலைமோதும் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் 16ம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று செய்யலாம். அக். 17ம் தேதிக்கான முன்பதிவு நாளையும், அக்.18ம் தேதி நாளை மறுநாள், அக்.19ம் தேதிக்கு முன்பதிவு வரும் 20ம் தேதியும், தீபாவளி நாளான 20ம் தேதிக்கான முன்பதிவை 21ம் தேதியும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.





















