துரத்தி துரத்தி கடித்த காட்டுப்பன்றி; 9 பேர் படுகாயம் - விழுப்புரம் மக்களுக்கு எப்போது நிம்மதி?
விழுப்புரம் அருகே காட்டுப்பன்றி ஊருக்குள் நுழைந்து 9 பேரை கடித்த குதறிய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் அருகே சித்தானங்கூர் கிராமத்தில் காட்டுப்பன்றி கடித்து 9 பேர் படுகாயம் அடைந்த நிலையில் முண்டியம்பாக்கம் அரசு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிராமத்திற்குள் நுழைந்த காட்டுப்பன்றி:
விழுப்புரம் மாவட்டம் சித்தானங்கூர் , மாமண்டூர் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று வழக்கம் போல் காலை 9 மணி அளவில் சித்தானங்கூரில் விவசாய நிலங்களுக்கு விவசாயிகள் சென்றுள்ளனர். அப்பொழுது ஏரி பகுதியில் இருந்து கரும்பு காட்டிற்குள் நுழைந்த காட்டுப்பன்றி விவசாயிகளை துரத்தி துரத்தி கடித்து குதறியுள்ளது. தொடர்ந்து கிராமத்திற்குள் நுழைந்த காட்டுப்பன்றி தெருவின் வெளியே அமர்ந்திருந்தவர்களை முட்டி தள்ளி கடித்து குதறி உள்ளது.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை:
தொடர்ந்து காலை 9 மணிக்கு கடிக்க தொடங்கிய பன்றியை வனத்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக செயல்பட்டு வந்ததால் சித்தானந்தூர் பகுதியில் சுமார் 9க்கும் மேற்பட்டோர்களை பன்றி கடித்து குதறியதால் படுகாயம் அடைந்த நிலையில் விரல் துண்டிக்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் அச்சம்
மேலும் அப்பகுதி மக்கள் காலை 9 மணிக்கு காட்டுப்பன்றி ஊருக்குள் நுழைந்து பொதுமக்களை கடித்துத் குதறிய நிலையில் பல்வேறு அதிகாரிகள் ஊருக்குள் முகாமிட்டாலும் தற்போது வரை அந்த காட்டு பன்றியை பிடிக்க முடியவில்லை என ஆதங்கம் தெரிவித்துள்ளனர். அதனை விரைவில் பிடித்தால் மட்டுமே காட்டுப்பன்றி கடியில் இருந்து நாங்கள் தப்பிப்போம் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் விழுப்புரத்தில் காட்டுப்பன்றி கடித்து ஒன்பது பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.