சேலம் விவசாயிகள் மீதான கருப்பு பணம் வழக்கினை அமலாக்கத்துறை கைவிட முடிவு?
அமலாக்கத்துறையின் நடவடிக்கையின் மீது விசாரணை நடத்தி விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் மற்றும் சாதிப்பெயர் குறிப்பிட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சியினர் கோரிக்கை.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன் பாளையம் அடுத்துள்ள செங்கேணிகுட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் முதியோர்களான கிருஷ்ணன் (71), கண்ணையன் (75). சகோதரர்களான இவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் அமலக்கத்துறையில் இருந்து கருப்பு பணம், பரிமாற்றம் தொடர்பாக நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பி உள்ளனர். அதில் முதியவர்களின் சாதியை குறிப்பிட்டு சம்மன் அனுப்பி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த முதியோர்களான கிருஷ்ணன் மற்றும் கண்ணயன் ஆகியோர் வழக்கறிஞர்களுடன் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வங்கிக் கணக்கு, ஆதார் உள்ளிட்ட ஆவணங்களோடு ஆஜராகினர். அப்போது அதன் அடிப்படையில் இவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது என வழக்கறிஞர்கள் தரப்பில் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள் அலட்சியமாக பதில் அளித்ததோடு, மீண்டும் அமலாக்கத் துறை அலுவலகத்தில் முதியோர்களை ஆஜராகும் படி தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் வழக்கறிஞர்களை மிரட்டும் தொனியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் பேசியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து முதியோர் தரப்பில் இருந்த வழக்கறிஞர் செல்லதுரை தரப்பினர் டிஜிபி அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது புகார் அளித்தனர்.
இதுகுறித்து பேட்டியளித்த கண்ணன், அமலாக்கத்துறை சாதியின் பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பியதால் அதை இரண்டு நாட்கள் வரை வாங்காமல் பிறகு பெற்றுக் கொண்டேன். அதில் சொத்து அதிகமாக உள்ளதாகவும், கருப்பு பணம் வைத்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. விசாரணைக்கு வரவில்லை என்றால் கைது செய்யப்படுவீர்கள் என கூறியதால் குறிப்பிட்ட நேரத்தில் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு சென்றோம். எங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை உட்பட பல்வேறு ஆவணங்களை அமலாக்கத் துறையினரிடம் ஒப்படைத்தோம். அதன்பின் அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றொரு நாள் வருமாறு கூறினர். அதற்கு எங்களால் வர முடியாது நீங்கள் வேண்டுமென்றால் எங்களது வீட்டிற்கு வந்து பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினோம். பாஜகவை சேர்ந்த குணசேகரன் என்பவர் வேண்டுமென்றே திட்டமிட்டு எங்களை பழிவாங்கும் நோக்கத்தோடு சாதி பயன்படுத்தி சம்மன் அனுப்பிய அதிகாரி மீதும் குணசேகரன் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளதாக கூறினார்.
இது தொடர்பாக விசாரித்தபோது கிருஷ்ணன் மற்றும் கண்ணையன் இருவரின் வங்கி கணக்கில் 500 ரூபாய் பணம் மட்டுமே வைப்புத் தொகையாக உள்ளது. இருப்பினும் அமலாக்கத்துறை அனுப்பி உள்ள கருப்பு பணம் பரிமாற்றம் போன்று எந்த பணம் பரிமாற்றமும் இவர்கள் இருவரும் மேற்கொள்ளவில்லை. மேலும் கடந்த சில நாட்களாக இவர்களிடம் உள்ள நிலத்தை பாஜக நிர்வாகி ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. அமலாக்கத்துறை அனுப்பி உள்ள சம்மன் பாஜக நிர்வாகிகள் தூண்டுதல் பெயரில் வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும், சாதியை குறிப்பிட்டு தபால் அனுப்பிய அமலாக்கத்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் வனத்துறை அதிகாரிகள் புகாரின் அடிப்படையில் சம்மன் அனுப்பப்பட்டதாக அமலாக்கத்துறை விளக்கம் அளித்திருந்தது. இந்தியாவிலேயே முதல்முறையாக வனத்துறை பதிவு செய்யப்பட்ட வழக்கிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதாக விமர்சனம் எழுந்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த வழக்கை கைவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமலாக்கத் துறையினரின் இந்த அறிவிப்பால் பாஜக நிர்வாகி தூண்டுதல் பெயரில் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டது என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர். மேலும் அமலாக்கத்துறையின் நடவடிக்கையின் மீது விசாரணை நடத்தி விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் மற்றும் சாதிப்பெயர் குறிப்பிட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்தனர்.