பாஜக மாநிலத் துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதி..
மருத்துவமனைக்கு உள்ளே அனுமதிக்க கோரி பாஜக தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள பாரதமாத கோயிலுக்கு கடந்த மாதம் 11-ஆம் தேதி சென்ற தமிழக பாஜக துணைத் தலைவர் சென்ற போது, கோயில் பூட்டிய நிலையில் இருந்துள்ளது. அதன் பின்னர் பூட்டை உடைத்து கோயிலுக்குள் சென்று பாரதமாதா சிலைக்கு மாலை அணிவித்துள்ளனர். ஆனால் இவர்கள் பூட்டை உடைக்கும் முன்னரே காவல் துறையினரும் கோயில் நிர்வாக அதிகாரிகளும் வெளியில் நின்று வழிபாடு செய்துவிட்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இதனை கேட்காமல், கோயில் பூட்டை உடைத்த பாஜக மாநில துணைத் தலைவர் உறுப்பினருமான கே.பி.ராமலிங்கம் உட்பட 50 பேர் மீது பாப்பாரப்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். நேற்று முன்தினம் இரவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், சட்டத்தினை மீறும் செயலைச் செய்ததிற்காகவும், அதனை முன்னின்று செய்ததிற்காகவும் தமிழக பாஜக துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் கைது செய்யப்பட்ட நிலையில் அங்கிருந்து மருத்துவ பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவருக்கு ரத்த கொதிப்பு, நெஞ்சுவலி உள்ளிட்ட உடல் பிரச்சினைகள் இருப்பதாக ராமலிங்கம் போலீசாரிடம் தெரிவித்தார். அதன்பின் பாப்பாரப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், உயர் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு மாற்றப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதை அறிந்த பாரதிய ஜனதாக் கட்சியினர் தொண்டர்கள் ஏராளமானோர் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் குவிந்தனர். ஆம்புலன்ஸில் இருந்து மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் அலைத்து வரப்பட்டபோது. அவரை பார்க்க பாஜக தொண்டர்கள் முற்பட்டனர்.
இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மருத்துவமனைக்கு உள்ளே அனுமதிக்க கோரி பாஜக தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல்துறையினருக்கும் பாஜகவினருக்கும் கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கே.பி.ராமலிங்கம் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சேலம் மாநகர காவல் துணை ஆணையர் லாவண்யா தலைமையில் காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல், திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் மற்றொரு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் அருகே உள்ள கிடாரம் கொண்டான் திரு.வி.க அரசு கலைக் கல்லூரியில் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கி சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று மதியம் பி.ஏ பொலிடிக்கல் சயின்ஸ் இரண்டாம் ஆண்டிற்கான தேர்வு நடைபெற்றது.
தேர்வறையில் இருந்த பேராசிரியர் மாணவர்களின் ஹால் டிக்கெட் போன்றவற்றை பரிசோதிக்கும் போது பாஸ்கர் என்பவருக்கு பதிலாக வேறொரு நபர் தேர்வு எழுத வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து உடனடியாக அந்த இளைஞரை தனி அறையில் அமர வைத்து விசாரித்த போது அவர் திருவாரூர் சபாபதி முதலியார் தெருவை சேர்ந்த மாதவன் மகன் 29 வயதான திவாகரன் என்பதும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு இரண்டு வருட உடற்கல்வி ஆசிரியர் படிப்பை படித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இவர் தற்போது திருவாரூரில் தள்ளுவண்டியில் பிரியாணி கடை வைத்து நடத்தி வருகிறார்.
மேலும் திவாகரன் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் லெட்சுமாங்குடி தோட்டச்சேரியை சேர்ந்த 48 வயதான பாஸ்கர் என்பவருக்கு பதிலாக தேர்வு எழுதியதை ஒப்புக்கொண்டுள்ளார். தனக்கு யாருக்கு தேர்வு எழுதுகிறோம் என்பது தெரியாது என்றும் தன்னை திருவாரூர் புலிவலம் பகுதியைச் சேர்ந்த மாவட்ட பாஜக கல்வியாளர் பிரிவு செயலாளர் ரமேஷ் என்பவர் தேர்வு எழுத அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து தேர்வு மேற்பார்வையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தாலுகா காவல்துறையினர் திவாகரன் மற்றும் ரமேஷ் ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதுடன் தேர்வு எழுதிய திவாகரன் மற்றும் பாஜக கல்வியாளர் பிரிவு மாவட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோரை தாலுகா காவல்துறையினர் கைது செய்தனர்.