TVK Vijay: பிரமாண்ட கூட்டத்திற்கு ”நோ” சொகுசு விடுதி ஏன்? தவெக 2ம் ஆண்டு தொடக்க விழா ரகசியங்கள், விஜய் பிளான் என்ன?
TVK Vijay: விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது ஆண்டு விழா, சொகுசு விடுதியில் நடைபெறுவது ஏன்? என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

TVK Vijay: விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது ஆண்டு விழாவில், அனுமதி சீட்டு உள்ளவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.
தவெக இரண்டாவது ஆண்டு விழா:
தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை, விஜய் தொடங்கி ஓராண்டு முடிந்துவிட்டது. 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் எங்களது இலக்கு என கூறி, கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளை விஜய் முடுக்கிவிட்டுள்ளார். அதன்படி மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை நியமித்து வருகிறார். இந்நிலையில் தான், தவெக இரண்டாமண்டு தொடக்க விழா நாளை நடைபெற உள்ளது. கட்சியின் முதல் மாநாட்டை போல பிரமாண்டமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மிகுந்த கட்டுப்பாடுகளுடன் சொகுசு விடுதியில் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
தவெக விழா எங்கு? எப்போது?
தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாம் ஆண்டுதொடக்க விழா, சென்னை அடுத்த மகாபலிபுரம் பூஞ்சேரி பகுதியில் உள்ள சொகுசு விடுதி யில் நாளை நடைபெற உள்ளது. காலை 7.45 மணிக்கு விழா தொடங்கும் என கூறப்படுகிறது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், நாளை நடைபெற உள்ள கூட்டம் தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சொகுசு விடுதி ஏன்?
விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சியின் முதல் மாநில மாநாட்டிற்கு பிறகு, விஜய் பொதுவெளியில் தொண்டர்களை சந்திக்கவே இல்லை. இரண்டாவது ஆண்டு தொடக்க விழாவிலாவது அவர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தலுக்கு தயாராவது எப்படி? மக்களிடையே செய்ய வேண்டிய பணிகள் என்ன? கூட்டணி திட்டங்கள் என பல்வேறு தேர்தல் வியூகங்கள் குறித்து, இந்த விழாவில் கலந்துரையாட முடிவு செய்து இருப்பதால், திறந்த வெளி கூட்டம் உகந்ததாக இருக்காது என விஜய் கருதியதாக தெரிகிறது. அதன் காரணமாக சொகுசு விடுதிக்கும் விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடும் கட்டுப்பாடுகள்:
இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலாளர்கள், துணை செயலாளர்கள், துணை தலைவர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் என 600-க்கும் அதிகமானோர் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். கட்சியின் அடுத்தக்கட்ட திட்டங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதால், கூட்டத்தில் பங்கேற்க நுழைவு அட்டை வைத்திருக்கும் நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. கட்சி முடிவுகள் தொடர்பாக ரகச்யங்களை காக்கும் வகையில் நிர்வாகிகள் செல்போனை 'சுவிட்ச் ஆப்' செய்துவிட்டு வரவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
கூட்டத்தின் நோக்கம் என்ன?
கூட்டத்தில் கட்சி தலைவர் விஜய் உடன், பொதுச்செயலாளர் என். அனந்த், தேர்தல் வியூக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் தேர்தல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். மேலும், தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கூட்டம் முழுக்க, முழுக்க 2026 தேர்தல் வியூகத்தை மேற்கொள்வதற்கான நிகழ்வாகவே திட்டமிடப்பட்டுள்ளது. நிர்வாகிகளுக்கு சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. அதன்படி, மக்களை எவ்வாறு சந்திக்க வேண்டும், எதை முன்னிறுத்தி தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டும், மற்ற கட்சிகளில் இருந்து வேறுபட்டு மக்கள் சேவை ஆற்றுவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

