Tamilisai Soundararajan: "நிச்சயமாக சொல்கிறேன்! ஜெயலலிதா இந்துத்துவா தலைவர்" - தமிழிசை சௌந்தரராஜன்
Tamilisai Soundararajan: இந்து மதத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட இந்துத்துவா தலைவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என முன்னாள் ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா இந்துத்வா தலைவர்:
தெலங்கானா மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன். இவர் மக்களவைத் தேர்தலில் தென்சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குடமுழுக்கு, கர சேவகர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பியது , ராமர் கோயிலுக்காக தொண்டர்களிடம் கையெழுத்து பெற்று அனுப்பியவர், ராமர் பாலம் போல பலவற்றை ஆதரித்தவர். இந்து மதத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட இந்துத்துவா தலைவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா
இன்று அவர் இருந்திருந்தால் ராமர் கோயில் சென்று வழிபட்டுவிட்டு ராமர் கோயில் என்ற கனவு நனவாகியுள்ளதாக கூறியிருப்பார். இன்று இருக்கும் அதிமுக தலைவர்கள் அன்று கரசேவகர்களை ஆதரித்தபோது எதிர்க்காதது ஏன்?
நல்ல நேரம் பார்ப்பவர்:
நாங்கள் ஜெயலலிதாவை பெரிய வட்டத்திற்கு எடுத்து செல்ல விரும்புகிறோம். அதிமுகவினர்தான் குறுகிய வட்டத்தில் சுருக்க நினைக்கின்றனர். பல ஆன்மிக நிகழ்ச்சியில் பங்கேற்றவர் ஜெயலலிதா. வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு நல்ல நேரம் பார்த்தவர்.
திமுகவினர் கூட ராகு காலம் , எமகண்டத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்வதில்லை. தென் சென்னை உட்பட அனைத்து தொகுதியிலும் திமுகவினர் போட்டிபோட்டு நல்ல நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர். திமுகவினர் பேசுவது போலி மதசார்பின்மை , நாங்கள் பேசுவதுதான் உண்மை என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
ஜெ.மறைவும், மோடி வருகையும்:
இதற்கு முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்ததாவது, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரின் வெற்றிடத்தை தமிழகத்தில் பாஜக நிரப்பி வருகிறது. மேலும், 2014ஆம் ஆண்டுக்கு முன்புவரை இந்து வாக்காளர்களின் இயல்பான தேர்வு அதிமுகவாகத்தான் இருந்தது. ஜெயலலிதா தனது இந்து அடையாளத்தை வெளிப்படையாக காட்டினார். ஜெயலலிதா மறைவுக்கு பின் இந்துத்துவா கொள்கையில் இருந்து அதிமுக விலகி விட்டது. அவரது மறைவும் மோடியின் வருகையுமே பாஜக வளர காரணமாக உள்ளன” எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு அதிமுக தரப்பினரிடையே எதிர்ப்பு கிளம்ப ஆரம்பித்தது. ஜெயலலிதாவின் தோழி சசிகலா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், ஜெயலலிதாவுக்கு தெய்வ நம்பிக்கை உண்டு எனவும் மத நம்பிக்கை இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என அண்ணாமலை குறிப்பிடுவது அவரது அறியாமையையும், தவறான புரிதலையும் வெளிப்படுத்துகிறது. ஜெயலலிதா சாதி, மத, பேதங்களை கடந்து அனைத்து தரப்பினராலும் மதித்து போற்றக்கூடிய மாபெரும் தலைவியாக தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியவர்.
இந்நிலையில், மீண்டும் முன்னாள முதலமைச்சர் ஜெயலலிதா மீது தமிழிசை சௌந்தரராஜன் மதம் குறித்து இணைத்து பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.