Hyundai EV: ரூ.4 லட்சம் தள்ளுபடி, எல்லாமே இருந்தும் வாங்க ஆள் இல்லை - என்ன பிரச்னை? இந்த கார் ஏன் பிடிக்கல?
Hyundai Ioniq 5 EV: ஹுண்டாய் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் மின்சார கார் மாடலான ஐயோனிக் 5 வாடிக்கையாளர்களை கவராதது ஏன்? என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Hyundai Ioniq 5 EV: ஹுண்டாய் நிறுவனத்தின் மின்சார கார் மாடலான ஐயோனிக் மீது ரூ.4 லட்சம் தள்ளுபடி அறிவித்தும் விற்பனை மிகவும் மந்தமாகவே உள்ளது.
ஹுண்டாயின் கவலைக்கிடம்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மின்சார வாகனங்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், பல முன்னணி நிறுவனங்களும் அடுத்தடுத்து புதிய EV-க்களை களமிறக்கி தங்களது போர்ட்ஃபோலியோவை வலுவாக்கி வருகின்றன. ஆனால், ஹுண்டாய் நிறுவனத்தின் மின்சார பிரிவு மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்பதே உண்மை. தனது பிரீமியம் மின்சார கார் மாடலான ஐயோனிக் மீது, ரூ.4 லட்சம் வரை சலுகை அறிவித்தும் கடந்த மே மாதத்தில் 11 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. பெரும் சலுகை அளித்தும் பொதுமக்கள் யாரு, ஐயோனிக் மீது ஆர்வம் காட்டாததால், கடந்த மாத ஒட்டுமொத்த விற்பனையில் ஹுண்டாய் நிறுவனம் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
ஐயோனிக் 5 - மே மாத விற்பனை:
கடந்த மே மாதம் ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்திற்கு மிகவும் ஏமாற்றம் மிகுந்த மாதமாக முடிவடைந்துள்ளது. ஒட்டுமொத்த கார் விற்பனையில் இந்த பிராண்டானது இரண்டாவது இடத்திலிருந்து, மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கிரேட்டா, வென்யு மற்றும் அக்ஸ்டெர் போன்ற எஸ்யுவிகளுக்கான தேவை நிலையாக இருந்தாலும், ஐயோனிக் 5 மற்றும் டக்சன் கார் மாடல்களின் விற்பனை மிகவும் மந்தமாகவே உள்ளது. கூடுதலாக இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த மே மாதம் வெறும் 11 ஐயோனிக் 5 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஜனவரி, பிப்ரவரி மற்றும் மாதங்களில் பதிவான, 16,16 மற்றும் 19 யூனிட்கள் என்ற விற்பனையை காட்டிலும் குறைவாகும்.
பெரும் தள்ளுபடி அளித்தும் பலன் இல்லை
கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் ஐயோனிக் 5 கார் மாடலை ஹுண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அதுநாள் முதல் தற்போது வரை அதன் விலை ரூ.46.05 லட்சமாக உயர்ந்துள்ளது. இருப்பினும், கையிருப்பில் உள்ள ஸ்டாக்குகளை விற்று தீர்க்கும் நோக்கில் ரூ.4 லட்சம் வரை சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.42.05 லட்சத்திற்கே இந்த காரை தற்போது சொந்தமாக்கலாம். இவ்வளவு தீவிரமான சலுகைகள் வழங்கியும் வாடிக்கையாளர்கள் ஐயோனிக் 5 மீது ஆர்வம் காட்டவில்லை. அதேநேரம், ஹுண்டாயின் கிரேட்டா மின்சார எடிஷன் மீதான ஆர்வம் பொதுமக்களிடையே அதிகரித்து இருப்பது, ஐயோனிக் 5 விற்பனையை மிகவும் பாதித்துள்ளது.
ஐயோனிக் 5 சொதப்பியது எங்கே?
ஹுண்டாயின் ஐயோனிக் 5 கார் மாடல் விற்பனையில் சொதப்பியதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இண்டகிரேடட் சார்ஜிங் கண்ட்ரோல் யூனிட்டில் ஏற்பட்ட முக்கிய பிரச்னை காரணமாக ரீகால் செய்யப்பட்டது அதன் மீதான நம்பகத்தன்மையை சிதைத்துவிட்டது. ஆரம்பத்திலேயே பிரதான சிக்கலை எதிர்கொண்ட இந்த கார், இந்தியாவின் கரடுமுரடான சாலைகளுக்கு பொருந்துமா? என்ற சந்தேகம் பொதுமக்களிடையே அதிகரித்தது. அதுபோக இந்த காருக்கான உதிரி பாகங்கள் இந்தியாவில் கிடைப்பது எளிதானதாக இல்லை. இதனால் கோளாறு ஏதேனு நேர்ந்தால், அதை சரி செய்வதற்கு கூடுதல் காலம் எடுக்கலாம். இத்தகைய காரணங்களால் தான், ஹுண்டாயின் ஐயோனிக் 5 கார் மாடலால இந்தியாவில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என கூறப்படுகிறது.
ஐயோனிக் 5 - வடிவமைப்பு விவரங்கள்:
ஐயோனிக் 5 கார் மாடலானது 4634 மிமீ நீளம், 1890மிமீ அகலம், 1625மிமீ உயரம் மற்றும் வீல்பேஸ் 3000 மிமீ-ல் அமைந்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு சாதகமான வகையில் உட்புற கேபின் அமைந்துள்ளது. காரணம் ஆர்ம்ரெஸ்ட்கள் மற்றும் ஸ்டீயரிங் வீல் முழுவதும் மறுசுழற்சி செய்யப்பட்ட மற்றும் உயிரி அடிப்படையிலான பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. சாஃப்ட் டச் மேற்பரப்புகள் மற்றும் பிக்சல் வடிவமைப்பு கூறுகள் உட்புறத்திற்கு ஒரு எதிர்கால உணர்வை சேர்க்கின்றன.
உட்புற அம்சங்கள்:
உட்புறத்தில் டிஜிட்டர் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் கலந்த இரட்டை 12.3 இன்ச் ஸ்க்ரீன் லே-அவுட் வழங்கப்பட்டுள்ளது. வசதிக்காக ஹெட்-அப் டிஸ்-பிளேவு இடம்பெற்றுள்ளது. எலெக்ட்ரிக் பார்கிங் பிரேக், நான்கு டிஸ்க் பிரேக்குகள், பவர் சைல்ட் லாக் மற்றும் விர்ட்சுவல் இன்ஜின் சவுண்ட் போன்ற அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. இதுபோக, 6 ஏர் பேக்குகள், மல்டி கொலிசன் அவாய்டன்ஸ் பிரேக்கிங் உள்ளிட்ட 21 பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய லெவல் 2 ADAS வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.
பேட்டரி, ரேஞ்ச் விவரங்கள்:
ஐயோனிக் 5 மின்சார எடிஷனில் உள்ள 72.6 KWh பேட்டரி பேக்கை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், 631 கிலோ மீட்டர் ரேஞ்ச் வழங்கும் என ஹுண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கார் 217 குதிரைகளின் திறன் மற்றும் 350Nm இழுவைத் திறனை உற்பத்தி செய்யக்கூடிய, எலெக்ட்ரிக் மோட்டாரை ரியர் வீல் ட்ரைவ் செட்டப்பில் கொண்டுள்ளது. 800V சிஸ்டம் மூலம் ஐயோனிக்கில் உள்ள பேட்டரியானது 10 சதவிகிதத்தில் இருந்து, 80 சதவிகிதத்தை வெறும் 18 நிமிடங்களில் எட்டிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





















