Z Symbol in Russian Military: ரஷ்ய - உக்ரைன் போர்; பிரபலமடைந்த Z குறியீடு- பின்னணி என்ன?
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரில், ரஷ்ய ராணுவ வாகனங்களில் உள்ள Z என்னும் குறியீடு பிரபலமடைந்து வருகிறது. இந்த குறியீட்டின் பின்னணி என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரில், ரஷ்ய ராணுவ வாகனங்களில் உள்ள Z என்னும் குறியீடு பிரபலமடைந்து வருகிறது. இந்த குறியீட்டின் பின்னணி என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
அண்டை நாடான உக்ரைனின் மீது ரஷ்யா போர் தொடுத்து, 15 நாட்களாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், ரஷ்ய ராணுவ வாகனங்களில் உள்ள Z என்னும் குறியீடு பிரபலமடைந்து வருகிறது. அண்மையில் ரஷ்ய ஜிம்னாஸ்டிக் வீரர், இவான் குலியக் Z எனும் எழுத்து அச்சிடப்பட்ட டிஷர்ட்டை அணிந்துவந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் உலக ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் உலகக்கோப்பைப் போட்டியில் நடந்த நிகழ்வு இது.
இதற்குப் பிறகு 'Z' என்னும் எழுத்து வரையப்பட்ட வண்டிகளின் புகைப்படங்கள் இணையவெளியில் அதிகம் பகிரப்பட்டன. சமூக வலைதளங்களில் இசட் எழுத்து அச்சிடப்பட்ட டிஷர்ட்டுகளை ரஷ்ய ஆதரவாளர்கள் அணிந்து, புகைப்படங்களைப் பதிவேற்றினர். இந்த எழுத்தின் குறியீடு என்ன என்பதுகுறித்து, ரஷ்ய ராணுவம் எதையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
எனினும் ரஷ்ய ஆதரவாளர்கள் சில கருத்துகளை முன்வைத்துள்ளனர். அதன்படி, "Za pobedy" என்னும் வார்த்தையில் உள்ள 'Z' என்னும் எழுத்து, வெற்றியைக் குறிக்கிறது. "Zapad" என்னும் வார்த்தையில் உள்ள 'Z' குறியீடு மேற்கு என்னும் பொருளைக் குறிக்கிறது என்கின்றனர்.
கடைசி உலகப் போர்?
இன்னும் சிலர் இதனை WORLD WAR Z என்பதற்கான குறியீடுதான் 'Z' என்கின்றனர். பல நாடுகளாகச் சிதறுண்ட சோவியத் ஒன்றியத்தை மொத்தமாக மீட்க ரஷ்யா தொடுக்கும் கடைசிப் போர் என்பதைக் குறிக்கும் வகையிலும் இருக்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.
சில நாட்களுக்கு முன்புதான் இந்தக் குறியீடு கண்டுபிடிக்கப்பட்டது என்றாலும், தற்போது 'Z' குறியீடு ரஷ்யக் கருத்தாக்கமாகவும் தேசிய அடையாளமாகவும் மாறி வருகிறது. ரஷ்யப் பணக்காரர்களும் அங்கு வசிக்கும் தொழிலதிபர்களும் தன்னிச்சையாகவே தங்களின் கார்களில், 'Z' குறியீட்டை அமைத்து, அதன் படங்களைப் பதிவேற்றி வருகின்றனர்.
சொந்த வாகன அடையாளம்?
எனினும் பிற அரசியல் பார்வையாளர்கள் சக ரஷ்யப் படையினர் போர்ப் பகுதிகளில் தங்களின் சொந்த வாகனங்களை அடையாளம் காணவே இவ்வாறான குறியீட்டை அமைத்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். எனினும் உக்ரைன் படையினர் இதே குறியீட்டைப் பயன்படுத்தி, குழப்பத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது என்பது ரஷ்ய ராணுவத்துக்குத் தெரியாமல் இருக்காது.
கடந்த மாதம் ரஷ்ய சிந்தனையாளர்கள் குழுவான RUSI-ன் முன்னாள் இயக்குநரும் பேராசிரியருமான மைக்கேல் கிளார்க் கூறும்போது, ஒரு குறிப்பிட்ட ராணுவப் பிரிவு அல்லது வாகனங்களுக்கு செய்தி அனுப்பவே இந்தக் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
முதன்முதலில் எங்கு இந்த குறியீடு கண்டுபிடிக்கப்பட்டது?
2014ஆம் ஆண்டு உக்ரைனின் க்ரீமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியபோது அங்குள்ள வண்டிகளில், 'Z' குறியீடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது உக்ரைனில் போர் தொடங்கிய பிப்ரவரி 22ஆம் தேதியே ரஷ்ய வாகனங்களில் 'Z' குறியீடு இருந்தது. இந்த வண்டிகள் டோனெட்ஸ்க் பகுதியில் நுழைந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பகிரப்பட்டன.
வேறு ஏதேனும் குறியீடுகள் இருந்தனவா?
உக்ரைன் போரில் 'Z' குறியீட்டைத் தாண்டி வேறு சில குறியீடுகளையும் ரஷ்ய ராணுவ வாகனங்களில் காண முடிந்தது. குறிப்பாக இரண்டு கோடிகளைக் கொண்ட முக்கோணம், 3 புள்ளிகளை உள்ளே கொண்டிருக்கும் வட்டம், வெளியே பெரிய முக்கோணம் இருக்க உள்ளே சிறிய முக்கோணம் ஆகிய குறியீடுகள் அதிகம் பிரபலமாகி வருகின்றன. எனினும் இவை குறித்து ரஷ்ய ராணுவ அதிகாரிகள், அதிகாரப்பூர்வமாக எதையும் இதுவரை தெரிவிக்கவில்லை.
வார்த்தைப் போர்
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழுவின் அவசர காலக்கூட்டம் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ரஷ்ய மற்றும் உக்ரைன் நாட்டின் பிரதிநிதிகள் 'Z' குறியீடு குறித்து விளக்கம் அளித்தனர். அதில், உக்ரைன் தூதர் செர்கி கைஸ்லெட்ஸியா கூறும்போது 'Z' குறியீட்டுக்கு zver என்று பொருள். இதற்கு ரஷ்ய மொழியில் மிருகங்கள் அல்லது விலங்குகள் என்று அர்த்தம் என்று கூறினார். இதற்கு பதிலடி கொடுத்த ரஷ்யாவின் தூதர் வாசிலி நெபென்சி, யார் விலங்குகள் என்பதுகுறித்து ரஷ்யர்களுக்கு சொந்தக் கருத்து உள்ளது என்று தெரிவித்தார்.
ரஷ்யா- உக்ரைன் இடையில் பல முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் இதுவரை இறுதி முடிவு எட்டப்படவில்லை. போர் நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை. 3ஆவது முறை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டதாக ரஷ்யா அறிவித்தும், உக்ரைன் அதற்கு மறுப்புத் தெரிவித்தது.
இதற்கிடையே, ''நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. தலைநகர் கீவின் பாங்கோவா தெருவில்தான் இருக்கின்றேன். நாட்டு மக்களுக்காக இறுதிவரை போராடுவேன். நேட்டோவில் இணைய இனிமேலும் அழுத்தம் கொடுக்க மாட்டேன்'' என்று உக்ரைன் அதிபர் வொலாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.