Kamal Haasan Tweet: மணிப்பூரில் குடியரசுத் தலவைர் ஆட்சியை அமல்படுத்துக: கமல்ஹாசன் ஆவேசம்
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் அரசு இயந்திரம் செயலிழந்து விட்டதாகவும், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை கலவரத்தில் ஈடுபட்ட இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளை களைந்து இழுத்துச் சென்றது. இது தொடர்பான வீடியோ வெளியாகி நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியையும் ,அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது. இவர்கள் அப்பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் கொலை, கடத்தல், கூட்டு பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பத்தில் தொடர்புடைய சிலரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து மணிப்பூர் மாநில முதலமைச்சர் பைரன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், “பெண்களுக்கு நிகழ்ந்த கொடூரங்கள் இதயத்தை கனக்க செய்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் அனைவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்து இருந்தார்.
அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் என பலரும் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது டுவிட்டரில், “மணிப்பூரில் மனிதநேயம் மரணித்துவிட்டது. மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடியின் மௌனத்தை இந்திய மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். வன்முறை நிகழ்ந்து வரும் நிலையில் மணிப்பூர் மக்களுடன் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். மாநிலத்தின் சமூக அமைதியை மோசமான வழியில் மோடி அரசு அழித்துவிட்டது” என பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது டிவிட்டர் பதிவில், “மணிப்பூரில் இருந்து வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை படங்கள் நெஞ்சை பதற செய்கின்றன. பெண்களுக்கு எதிரான இந்த கொடூரமான வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் எண்ணிக்கை குறைவாக உள்ளது. சமூகத்தில் வன்முறையின் உச்சக்கட்ட சுமையை பெண்களும் குழந்தைகளும் சுமக்க வேண்டியுள்ளது. மணிப்பூரில் அமைதிக்கான முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லும் போது நாம் அனைவரும் வன்முறைக்கு எதிராக ஓர் அணியில் குரல் எழுப்ப வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க,