Kerala: பளபளக்கும் வாள்! கேரளாவில் ஆயுதங்களுடன் பேரணி சென்ற பெண்கள்.. பாய்ந்த வழக்கு!!
கேரளாவில் திருவனந்தபுரத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் பெண்கள் அணியான துர்கா வாஹிணி அமைப்பைச் சேர்ந்த பெண்கள் கைகளில் ஆயுதங்களுடன் பேரணியாக சென்றதைக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
விஷ்வ ஹிந்து பரிஷத்
கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தின் கீழாரூர் பகுதியில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் பெண்கள் அணியான துர்கா வாஹிணி அமைப்பைச் சேர்ந்த சுமார் 200 அடையாளம் தெரியாத பெண்கள் கைகளில் ஆயுதங்களுடன் பேரணியாக சென்றதாகக் கேரள காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த மே 22 அன்று, துர்கா வாஹிணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆயுதங்களுடன் பேரணியாக செல்லும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகின. அதனைத் தொடர்ந்து, இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா இதுகுறித்து புகார் தெரிவித்ததோடு, காவல்துறையினரிடம் இந்தப் பேரணியை நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரியது. மேலும், ஆயுதங்களுடன் நடைபெற்ற இந்தப் பேரணியின் பின்னணியில், நெய்யட்டிங்காரா அருகில் உள்ள கிராமத்தில் ஆயுதப் பயிற்சி எடுக்கப்படுவதாகவும் தகவல்கள் எழுந்துள்ளன.
எனினும், காவல்துறை தரப்பில், இந்தப் பேரணி குறித்து சில அமைப்புகள் புகார் தெரிவித்ததாகவும், காவல்துறையினர் பேரணியின் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பார்த்த பிறகு, தாமாகவே முன்வந்து வழக்குப் பதிவு மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
வழக்குப் பதிவு
இதுகுறித்து பேசியுள்ள காவல்துறை அதிகாரி ஒருவர், `சுமார் 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம்.. எனினும் யாருடைய பெயரும் இதில் இடம்பெறவில்லை. பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல், அனுமதியின்றி கூடுதல், அனுமதியின்றி ஆயுதங்களோடு கூடுதல், கலவரம் செய்தல், கலவரம் செய்யும் நோக்கத்தோடு பிறரைத் தூண்டுதல் முதலான குற்றங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆயுதங்கள் சட்டத்தின் 25வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து சேர்க்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: Two Thousand Rupee : 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுகிறதா ரிசர்வ் வங்கி? என்ன காரணம்? அறிக்கை சொல்வது என்ன?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்