மருத்துவக் கல்லூரிகளில் NRI இட ஒதுக்கீட்டில் மாபெரும் மோசடி! அதிர்ச்சியில் அமலாக்கத்துறை- பின்னணி என்ன?
போலி ஆவணங்கள் மூலம் என்ஆர்ஐ ஒதுக்கீட்டு இடங்களில், வேறு மாணவர்களை சேர்த்திருப்பது அமலாக்கத் துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கையில் வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் மோசடி நடந்துள்ளதாக அமலாக்கத் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நாடு முழுவதும் இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதிலேயே பல்வேறு மோசடிப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், இம்முறை மாணவர் சேர்க்கையில் மோசடி நடந்துள்ளதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது.
குறிப்பாக, போலி ஆவணங்கள் மூலம் என்ஆர்ஐ ஒதுக்கீட்டு இடங்களில், வேறு மாணவர்களை சேர்த்திருப்பது அமலாக்கத் துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மோசடி தெரிய வந்தது எப்படி?
இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் சேரும் வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களில் (என்ஆர்ஐ) பலர் உண்மையில் வெளிநாட்டில் வசிக்கவில்லை என்று புகார்கள் எழுந்தன. குறிப்பாக பல்வேறு வெளிநாடுகளில் உள்ள அதிகாரிகளும், அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் இதுபற்றி, மத்திய வெளியுறவுத் துறைக்குத் தகவல் அளித்தனர்.
இதையடுத்து மத்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில், அமலாக்கத் துறை அதிகாரிகள், மோசடி குறித்து தீவிர விசாரணையில் இறங்கினர். அதில் போலி ஆவணங்கள் மூலம் சுமார் 18 ஆயிரம் மாணவர்கள், மோசடி செய்து என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தது தெரிய வந்தது.
மோசடி நடந்தது எப்படி?
மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் ஒதுக்கீட்டு இடங்கள், வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்கள் மூலம் மருத்துவ இடங்கள் நிரப்பப்படுகின்றன.
இந்த நிலையில், காலியாக உள்ள வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில், இந்தியாவிலேயே வசிக்கும் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். போலியான ஆவணங்கள், தூதரக சான்றிதழ்கள் ஆகியவற்றைச் சமர்ப்பித்துள்ளனர் என்பது அமலாக்கத் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
இந்த நிலையில், இந்த மோசடி குறித்து தகவல் தெரிவித்தும் மேற்கு வங்க, ஒடிசா மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து அமலாக்கத்துறை, மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி வங்கியில் வைத்துள்ள வைப்புத் தொகை ரூ.6.42 கோடியை முடக்கியது. அதேபோல மேலும் சில தனியார் கல்லூரிகளின் 10 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட தொகையையும் அமலாக்கத் துறை முடக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.






















