Urban Local Body Polls: என் ஒருவர் சம்பளம் போதாது; நேர்மை அரசியலுக்கு நன்கொடை தாரீர் - கமல்ஹாசன் கடிதம்
பகாசுர ஊழல் பேர்வழிகளை எதிர்த்துப் போராட பணஉதவி செய்யுங்களென உரிமையுடன் உங்களிடம் கேட்கிறேன்.
![Urban Local Body Polls: என் ஒருவர் சம்பளம் போதாது; நேர்மை அரசியலுக்கு நன்கொடை தாரீர் - கமல்ஹாசன் கடிதம் MNM Party Leader Kamal Haasan Requests Tamil Nadu Peoples Donate to Honest politics TN Urban Local Body Election Urban Local Body Polls: என் ஒருவர் சம்பளம் போதாது; நேர்மை அரசியலுக்கு நன்கொடை தாரீர் - கமல்ஹாசன் கடிதம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/02/5b664d19e03b27771edb39ad1b4d0945_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நேர்மையான அரசியல் செய்ய நன்கொடை தாருங்கள் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக கமல்ஹாசன் எழுதிய கடிதம்
உயிரே உறவே தமிழே,
நல்லாருக்கீங்களான்னு நான் கேட்டால் பழக்கதோஷத்துல ‘ஆமா சார்’ என்று சொல்வீர்கள். அதையே நான் சற்று மாற்றி ‘சந்தோஷமாக இருக்கிறீர்களா?’ என்று கேட்டால், கொஞ்சம் யோசித்து ‘ஏதோ போகுது சார்..’ என லேசாக இழுப்பீர்கள்.
எங்கே போனது நமது மகிழ்ச்சி? யாரால் பறிபோனது நமது நிம்மதி? கொண்டாட்டமாக இருக்க வேண்டிய வாழ்க்கையைத் திண்டாட்டமாக மாற்றியது யார்? உணவு, கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், மருத்துவம் என நமது வாழ்க்கையின் அனைத்து அலகுகளையும் அரசியல்தான் தீர்மானிக்கிறது. அரசியல் நுழையாத இடமே இல்லை.
ஆனால், இந்த அரசியல் நாம் விரும்பினது அல்ல. நம் மேல் திணிக்கப்பட்ட ஒன்று. ஒரு பக்கம் மதவெறி, மறுபக்கம் ஊரையே அடித்து உலையில் போடத் துடிக்கிற ஊழல் வெறி, எல்லாப் பக்கமும் வாரிசுகளை வளர்த்து வாரிச்சுருட்டும் வெறி என்று தமிழ்நாடு சீரழிந்துகொண்டிருக்கிறது. ஒழிந்த நேரங்களில் இரண்டு கழகங்களும் ஒருவர் மீது ஒருவர் பழிபோடுவார்கள் அல்லது ஒருவரையொருவர் பழிவாங்குவார்கள்.
நீங்களும் நானும் செலுத்திய வரிகள் நமக்கே திரும்பி வந்திருக்கவேண்டும். நமது நல்வாழ்விற்காகவும் எதிர்கால சந்ததியினரின் நலன்களுக்காகவும் செலவிடப்பட்டிருக்க வேண்டும். மகிழ்ச்சியான, நிம்மதியான, பாதுகாப்பான ஒரு வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
விலைவாசியை கட்டுப்படுத்தி தரமான கல்வி, சிறந்த மருத்துவம், அதிக வேலைவாய்ப்புகள், தொழில் செய்ய கடனுதவிகள் கொடுத்திருந்தால் உங்கள் வாழ்க்கை எந்த ‘இலவசங்களும்’ இல்லாமல் தானே மேலே வந்திருக்கும். செய்தார்களா இவர்கள்?!
பெண் பிள்ளைகளைத் தனியாக எங்கேனும் அனுப்பி விட்டு நிம்மதியாக இருக்கமுடிகிறதா? திரும்பிய திசையெல்லாம் சாராய கடைகள், எந்த அரசுக் கட்டுமானம் எப்போது இடிந்துவிழுமென சொல்ல முடியாது. நல்ல தண்ணீருக்கு நாயாக அலைய வேண்டும். மழை வந்தாலோ முங்கிச் சாகவேண்டும். நம் பாதுகாப்பு இவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை.
எந்த ஒரு சிவிக் பிரச்சனையையாவது 24 மணி நேரத்தில் தீர்க்க முடியுமா? ஓர் அரசு அலுவலகத்தில் நுழைந்துவிட்டு அவமானப்படாமல் வெளிவர முடியுமா? அரசுப் பள்ளிகளும், மருத்துவமனைகளும் ஏன் இப்படி இருக்கின்றன? நியாய விலைக்கடைகளில் விற்கப்படும் பொருட்களின் தரம் ஏன் இப்படி இருக்கிறது?
ஏழை இன்னும் பரம ஏழையாக வேண்டும்; நடுத்தர வர்க்கம் போராடியே சாக வேண்டும், அப்போதுதான் அரசியல் செய்ய முடியும் என நினைக்கிறார்கள். இதில் அவ்வப்போது மதத்தையும் ஜாதியையும் கலந்துவிட்டால் போதும். கூடுதல் சுவைக்கு வந்தேறி அரசியல், வடக்கு தெற்கு அரசியல் எனும் பூச்சாண்டி அரசியல். எல்லாம் சரி, 75 ஆண்டுகளாக எங்கள் வாழ்க்கை ஏன் மாறவில்லையெனும் கேள்வியை, நீங்கள் கேட்டுவிடாமல் இருப்பதற்கான சகல உபாயங்களையும் செய்கிறார்கள்.
என் தொகுதி எம்.எல்.ஏ பரமயோக்கியன். பத்து பைசா திருட மாட்டார் என்று உங்களாலும் சொல்ல முடியாது, என்னாலும் சொல்ல முடியாது. இதுதான் நிதர்சனம். இதை மாற்ற வேண்டும், தமிழக மக்களின் வாழ்வை உறிஞ்சும் களைகளை அகற்றி ஊழலற்ற நேர்மையான திறமையான நிர்வாகத்தின் மூலம் தமிழகத்தை உலகின் முதன்மையான மாநிலமாக மாற்ற வேண்டும். சமூக நீதியும், சமத்துவமும், வர்க்க வேறுபாடுகளும் இல்லாத தமிழ்ச் சமூகத்தை உருவாக்க வேண்டும் எனும் லட்சியக் கனலை இதயத்தில் ஏந்தி உருவான இயக்கம்தான் மக்கள் நீதி மய்யம்.
வெற்றி, தோல்வி, அதிகாரம், கோட்பாடுகள், நம்பிக்கைகளைப் பின்னால் இருத்தி விட்டு மக்கள் நலன், தமிழக மேம்பாடு ஆகியவற்றை முன்னுக்கு நிறுத்தி அரசியல் செய்யும் கட்சி மக்கள் நீதி மய்யம். என் எஞ்சிய வாழ்க்கை தமிழக மக்களுக்குத்தான் என நான் பேசியது சினிமா வசனமல்ல. என் வாழ்க்கை நியதி. முடியாது, நடக்காது என சொன்ன பல விஷயங்களை எனது சினிமாத் துறையில் நடத்திக்காட்டிய முன்னோடி நான். என் தொழிலில் என்னை பலரும் தீர்க்கதரிசி என இன்று புகழ்கிறார்கள். எனக்கு தீர்க்க தரிசனங்களில் நம்பிக்கை கிடையாது. தீர்க்கமான எண்ணங்களில், தீவிரமான செயல்பாடுகளில் நம்பிக்கை உண்டு. நான் வாழும் காலத்திலேயே தமிழகத்தில் மாற்றம் நிகழும், தமிழர்கள் வாழ்வு ஏற்றம் பெறும். இது என் கனவு அல்ல. என் பிரயத்தனம். இதை நானும் என் சகாக்களும் நிச்சயம் நடத்திக் காட்டுவோம்.
மக்களுக்கான அரசியலைச் செய்யும் இந்தப் போரில் பெட்டி பெட்டியாக - மன்னிக்கவும் - கண்டெய்னர் கண்டெய்னராக பணம் வைத்திருக்கக் கூடிய, அசுர பலம் வாய்ந்த ஊழல்வாதிகளை எதிர்த்து களத்தில் நிற்கிறோம். இவர்களை எதிர்த்துப் போராட எங்களிடம் துணிச்சல் இருக்கிறது. திறமை இருக்கிறது. நேர்மை இருக்கிறது. ஆனால், போதிய பணம் இல்லை.
என் தொழிலில் சம்பாதிக்கும் பணத்தில் முறையாக வரி செலுத்தியது போக எஞ்சிய தொகையில் பெருமளவை நான் மக்களுக்கான அரசியலுக்குத்தான் செலவிடுகிறேன். ஆனால் பூதாகரமான ஊழல் பெருச்சாளிகளை எதிர்த்துப் போராட என் ஒருவனின் சம்பாத்யம் போதாது.
என்னுடைய கட்சி ‘ஸ்வீட் பாக்ஸ்’ கூட்டணிகளை அமைத்து அதிகாரத்தில் இடம் பிடித்து ஊழல்கள் செய்யவில்லை. இயற்கை வளங்களைத் திருடி விற்கவில்லை. சாராய ஆலைகளை நடத்தவில்லை. பகாசுர நிறுவனங்களிடம் பெட்டி வாங்கிக்கொண்டு கூவுவதில்லை. ஜாதியை விசாரித்து, பணக்கார வேட்பாளரா என பார்த்து சீட் கொடுத்து தேர்தலை எதிர்கொள்ளவில்லை. இவற்றை செய்யப்போவதும் இல்லை.
மக்களுக்கான அரசியலை செய்ய, மக்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த மக்களாகிய உங்களிடமே உரிமையுடன் கொடை கேட்கிறோம். நேர்மை அரசியலுக்கு நன்கொடை தாருங்கள் என ஊரறிய உலகறிய கேட்கிறோம். இந்தப் பங்களிப்பு நீங்கள் நலமாக வாழ மட்டுமல்ல, உங்கள் தலைமுறையும் நல்ல சூழலில் வாழ்வதற்கும், நீங்கள் விரும்புகிற நேர்மையான அரசும் நல்ல நிர்வாகமும் அமைவதற்கும் செய்யும் முதலீடு. இங்கே விதைத்ததை நீங்களும் உங்கள் குடும்பமும் நிச்சயம் அறுவடை செய்யும்.
ஊர் கூடி தேர் இழுக்க நீங்களும் ஒரு கை கொடுங்கள். நேர்மை அரசியலுக்கு நன்கொடை தாருங்கள்.
இணையதள முகவரி: http://www.maiam.com/donate
நம்மீது திணிக்கப்பட்டிருக்கும் தரமற்ற அரசியலை மாற்றி, மக்கள்நலனை முன்னிறுத்தும் நேர்மையான அரசியலைச் செய்ய தீவிரமாகக் களத்தில் நிற்கிறோம். பகாசுர ஊழல்பேர்வழிகளை எதிர்த்துப் போராட பணஉதவி செய்யுங்களென உரிமையுடன் உங்களிடம் கேட்கிறேன். https://t.co/NsgkJ2uRuT#Donate2HonestPolitics pic.twitter.com/TW5VUmwPIx
— Kamal Haasan (@ikamalhaasan) February 2, 2022
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)