புதுச்சேரியில் வாரிய தலைவர்கள் பதவிகேட்டு, பா.ஜ.க., ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி
புதுச்சேரியில் வாரிய தலைவர்கள் பதவி கேட்டு பா.ஜ.க., ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
புதுச்சேரியில் வாரிய தலைவர்கள் பதவி கேட்டு பா.ஜ.க., ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பா.ஜ.க.வில் 6 எம்.எல்.ஏ.க்கள், 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் என 9 பேர் உள்ளனர். இதுதவிர சுயேச்சைகள் 3 பேர் பா.ஜ.க.வுக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளனர். சட்டமன்ற தேர்தல் நேரத்தில் பிற கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை பா.ஜ.க. தனது பக்கம் இழுத்து கொண்டது. அப்போது அவர்களுக்கு தேர்தல் முடிந்த பின்னர் வாரிய தலைவர் உள்ளிட்ட பதவிகளை தருவதாக உறுதியளித்தது.
நமச்சிவாயம் தொழில்துறை அமைச்சர் பதவி வகித்து வருவதால், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு பிப்டிக் வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டது. மேலும் சிலருக்கு வாரிய தலைவர் பதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் பா.ஜ.க. மற்றும் ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் தங்களுக்கும் பதவி கிடைக்கும் என்ற ஆசையில் இருந்தனர்.
இதனை தொடர்ந்து அவர்கள் சமீபத்தில் ரங்கசாமியை சந்தித்து வாரிய தலைவர் பதவி தொடர்பாக பேசினர். அப்போது அவர், தற்போது வாரியங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் வாரிய தலைவர் பதவி வழங்க முடியாது என்று மறுத்து விட்டார். இதனால் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள், பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்த சுயேச்சைகள் கடும் அதிருப்திக்கு உள்ளானார்கள். மேலும் வாரிய தலைவர் பதவி தங்களுக்கு மறுக்கப்பட்டால் பா.ஜ.க.வுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெறுவதாக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து பா.ஜ.க. தலைவர், மற்றும் அமைச்சர்கள், அதிருப்தியில் உள்ள சுயேச்சை எம்.எல்.ஏ.க்களை சமாதானம் செய்தனர். அப்போது மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல், புதுவை மாநில பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா ஆகியோர் புதன்கிழமை புதுச்சேரிக்கு வருகை தர உள்ளனர். அவர்களிடம் கலந்து பேசி பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சுயேச்சைகளுக்கு வாரிய தலைவர் பதவி கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர்.
இருப்பினும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் திருப்தி அடைந்ததாக இல்லை. அவர்கள் தங்களுக்கு வாரிய தலைவர் பதவி கிடைக்க வில்லை என்றால் பா.ஜ.க.வுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் வாங்குவதில் திட்டவட்டமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கூட்டணியில் இடம்பெற்றுள்ள அ.தி.மு.க.வும் தங்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து கடிதம் அளித்துள்ளனர். என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் தங்களுக்கு தேர்தல் நேரத்தில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. நாங்களும் தொடர்ந்து கட்சி பணி செய்து வருகிறோம். தங்களுக்கும் வாரிய தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதனால் வாரிய தலைவர் விவகாரம் புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்