ஆளுநர் பதவியில் இருந்து விலகி, தெருவில் நின்று சனாதன நெறிகளை பற்றி பேசவேண்டும் - டி.ராஜா
தமிழகத்தை ஆளுவது என்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுதான், திரு ரவி அல்ல என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் எனவும் பேசினார்.
சேலம் மாநகர் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, "இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தான் ஒரு பிரதமர் தகுதிக்கு பொறுப்புக்கு கண்ணியத்தோடு பிரச்சினைகளை மக்களிடம் விளக்குவதற்கு பதிலாக, தனது கட்சிக்கு தேர்தல் பிரச்சாரமாக எதிர்க்கட்சிகளை வசைப்படுவதற்காக சுதந்திர தினத்தை பயன்படுத்திக் கொண்டது வருத்தத்தை அளிக்கிறது. இது கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிவிட்டார் தேர்தல் பிரச்சாரகளம் உருவாகியுள்ளது. பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சியில் நாடு நிலைகுலைந்து உள்ளது என்பது அனைவரும் அறிவார்கள், பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வந்துவிட்டால், இந்தியா வலிமைமிக்க மூன்றாவது பொருளாதாரம் ஆக மாறிவிடும் என்று மார்தட்டி வருகிறார். மக்களுக்கு உறுதி அளிப்பதாக கூறுகிறார். பிரதமர் மோடி ஒன்றை உணர வேண்டும், கடந்த காலங்களில் அவர் கொடுத்த வாக்குறுதி என்னானது. குறிப்பாக ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகள், கருப்பு பணம் வெளிக்கொண்டுவரப்படும் மற்றும் ஒவ்வொரு குடிமகன் வங்கி கணக்கிலும் 15 லட்சம் பணம் செலுத்தப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை கொடுத்திருந்தார் இது என்னானது என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்தியாவில் ஒருபகுதிதான் மணிப்பூர், மணிப்பூரில் அமைதி நிலவவேண்டும் உள்நாட்டு போரில் மக்கள் கொல்லப்படுகிறார்கள் மற்றும் பெண்கள் சொல்லமுடியாத வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். எனவே பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்லவேண்டும், மணிப்பூருக்கு என்ன செய்யவேண்டும் என்பது குறித்து விளக்கவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து கேள்வி எழுப்பினும் ஆனால் அமித்ஷா அதைப்பார்த்துக் கொண்டு வருகிறார் என்று கூறுகிறார். எனவே மணிப்பூர் பற்றி பேசவேண்டும் பிரதமர் மௌனமாக இருப்பது, வாய்மூடி கிடப்பது மணிப்பூர் விவகாரத்தில் தீர்வு காண்பதாக இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டது. இந்த பிரச்சினை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மணிப்பூர் அனைத்து பகுதி மக்களிடமும் ஒற்றுமையை உருவாக வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறோம் என்றும் பேசினார். மணிப்பூர் முதல்வர் பொறுப்பில் இருந்து அகற்றப்பட வேண்டும் அதற்கு பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா தயாராக இல்லை, மணிப்பூரில் ஒருபகுதியை, மற்றொரு பகுதிக்கு எதிராக நிறுத்தி தேர்தலுக்கான அரசியல் லாபம் ஈட்ட வேண்டும் என்று நினைக்கிறார்கள். தேர்தல்களம் இந்தியாவில் அமைக்கப்பட்டு விட்டது.
சுதந்திர தின கொண்டாட்டத்தில் பிரதமர் பேசியது தேர்தல் காலபிரச்சார உரை. மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகள் மற்றும் இடதுசாரி கட்சிகள் அனைத்தும் நாட்டைக் காப்பாற்ற வேண்டும், பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து விரட்டவேண்டும் என்ற கருத்து அகில இந்தியளவில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய தேசிய வளர்ச்சி ஒருங்கிணைப்பு அணி என்ற பெயரில் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. எதிரணிகள் அனைவரும் ஒன்றிணைத்து கூட்டத்தை நடத்தி வருகிறோம் எனவும் தெரிவித்தார். அடுத்த ஆண்டும் நான்தான் தேசியக்கொடி ஏற்றுவேன் என்று பிரதமர் கூறியது வாய்ச்சவடால், பிரதமர் அச்சத்தில் இருப்பதன் காரணமாக பேசியுள்ளார். பிரதமர் என்ற பொறுப்புடன் சுதந்திரதின விழாவில் பேசியிருக்க வேண்டும் பாஜக, ஆர்எஸ்எஸ் தலைவர் என்ற முறையில் உரையாற்றவில்லை, இந்திய அணியில் இருக்கின்ற எல்லாம் கட்சிகளும் அரசியல் முதிர்ச்சிகள் இருக்கிறது. இப்பொழுது இருக்கின்ற உடனடிக் கடமை என்பது பாஜகவை வீழ்த்த வேண்டும், மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதுதான். பாஜகவை வீழ்த்தி மாற்று ஆட்சி அமைக்கின்ற சூழல் வரும்போது அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து தலைமையை உருவாக்க முடியும் ஆட்சி அமைக்க முடியும்.
பாரதிய ஜனதா கட்சி சமூக ஊடகங்களை எப்படி பயன்படுத்துகிறது. மக்களின் சிந்தனைகளை களவாட வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்கள். பெண் குழந்தைகள், தாய்மார்கள் ஏற்படுகின்ற கொடுமைகள் பிரதமர் மோடி பேசுவதில்லை. பெண் இடஒதுக்கீட்டு மசோதாவை ஏன் கொண்டு வரவில்லை?. பெண் இடஒதுக்கீடுக்கான மசோதாவை முன்வைக்கப்பட்டு ஏன் சட்டமாக்கப்படவில்லை" என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடியின் தயவின் காரணமாக பெண்கள் உயர்த்தப்படுகிறார்கள் என்று பேசுவது பெண்களை அவமானப்படுத்தும் செயல். பெண்களுக்கான நியாயமான உரிமைகள் ஏன் மறுக்கப்படுகிறது என்பதை மோடி விளக்கவேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார். பாஜக ஆட்சியில் விவசாயிகளில் வருமானம் இருமடங்காக உயர்த்தப்படும் என்று கூறியிருந்தார்கள். ஆனால் பாஜக கொண்டுவரும் சட்டங்கள் விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் எதிரான சட்டமாக இருந்து வருகிறது என்பதை மறந்துவிட முடியாது. இதுகுறித்து பிரதமர் மோடி விளக்கவேண்டும் என்றும் கூறினார்.
பாரதிய என்று பெயர் மாற்றப்படுவதாலே, காலணி ஆதிக்கம் கலைந்து எறிவது என்று சொல்வது ஏற்புடையது அல்ல என்றும் பேசினார். தமிழக ஆளுநர் அகற்றப்பட வேண்டும் என்பதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வலியுறுத்தி வருகிறோம். ஆளுநர் சட்ட விதிமுறைக்கு உட்பட்டு செயல்படுவதாக இல்லை. மத்திய அரசின், ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு ஆதரவாக ஆளுநர் உள்ளார் என்பதை தமிழக மக்கள் அறிந்துள்ளனர். ஆளுநர் பதவியில் இருந்து விலகி, தெருவில் நின்று சனாதன நெறிகளை பற்றி பேசவேண்டும் என்றும் கூறினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசு கொண்டு வருகின்ற சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து, குடியரசுத் தலைவருக்கு அனுப்பக்கூடியவர். ஆளுநருக்கு முடிவெடுப்பதற்கான அதிகாரம் அவர்களுக்கு இல்லை. தமிழகத்தின் ஆளுநர் என்றால் முதலமைச்சர்தான், தமிழகத்தை ஆளுவது என்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுதான், திரு ரவி அல்ல என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.எனவே தான் அவர் அகற்றப்பட வேண்டும் என்பதை இந்தி கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்றும் தெரிவித்தார்.