Vijayakanth: நுரையீரல் பிரச்சினையால் அவதி.. விஜயகாந்துக்கு டிரக்கியாஸ்டமி சிகிச்சையளிக்க மருத்துவர்கள் முடிவு?
உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு டிரக்கியாஸ்டமி சிகிச்சை அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு டிரக்கியாஸ்டமி சிகிச்சை அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் மிகப்பெரிய நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். இவர் தேமுதிக என்ற கட்சியை தொடங்கி அரசியலில் நுழைந்து அங்கும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தினார். இன்றளவும் கட்சி தாண்டி விஜயகாந்தை நேசிப்பவர்கள் ஏராளமானோர் உள்ளனர். அதற்கு காரணம் எதிர்பாராமல் அவர் செய்த உதவி தான் என பலரும் நேர்காணல்களில் சொல்லி கேட்டிருப்போம்.
இப்படியான விஜயகாந்த் கடந்த ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக 2 முறை வெளிநாடுகளிலும் சிகிச்சைப் பெற்று வந்தார். மேலும் உடல் நலம் பாதிக்கப்பட்டதில் இருந்தே வெளிநிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வந்த விஜயகாந்த், ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டும் தேமுதிக அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தொண்டர்களிடையே சந்தித்து வந்தார்.
இதனிடையேகடந்த நவம்பர் 18 ஆம் தேதி விஜயகாந்த் உடல்நலக்குறைவால் போரூரில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றிருக்கிறார் என்று தேமுதிக தலைமைக்கழகம் தெரிவித்தது.
ஆனால் நவம்பர் 23 ஆம் தேதி மியாட் மருத்துவமனை விஜயகாந்த் உடல்நலம் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், “விஜயகாந்த் காய்ச்சல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் 18 நவம்பர் 2023 அன்று அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு தருகிறார். அவர் உடல் நிலை சீராக உள்ளது. அனைத்து உடல் செயல்பாடுகள் நிலையாக உள்ளது. இன்னும் சில நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு அவர் வீடு திரும்பி தனது வழக்கமான நடவடிக்கைகளைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே இன்று மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “திரு. விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது” என கூறப்பட்டது. இதனால் தொண்டர்கள், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் விஜயகாந்துக்கு டிரக்கியாஸ்டமி சிகிச்சை அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த டிரக்கியாஸ்டமி சிகிச்சையானது நுரையீரல்களில் உள்ள அடைப்புகளை நீக்கி காற்று எளிதாக நுழைவதற்கு உதவுகிறது. மேலும் இதன்மூலம் வாய், மூக்கு மற்றும் தொண்டையைத் தவிர்த்து டியூப் வழியாக சுவாசிக்கவும் உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.