தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் கம்பம் பகுதியில் திடீர் ஆய்வு! காரணம் என்ன?
கம்பம் உழவர் சந்தை பகுதியில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் திடீர் ஆய்வு தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த விலங்குகள் நல ஆணையத்திற்கு வலியுறுத்துவேன் என பேட்டி..
தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் அவர்கள் தினசரி உடற்பயிற்சிக்காக 20 கிலோமீட்டர் தூரம் வரை சைக்கிளில் கம்பம் நகரை சுற்றி சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். எம்பி ஆவதற்கு முன்பிருந்தே இந்த சைக்கிள் பயிற்சி மேற்கொண்டு வரும் அவர் தற்போது எம்பி ஆன பின்னரும் அதனை தொடர்ந்து வருகிறார்.இந்நிலையில் இன்று வழக்கம் போல் சைக்கிள் பயிற்சி ஈடுபட்ட எம்பி தங்க தமிழ்ச்செல்வன் தனது இல்லத்தில் இருந்து கம்பம் அருகே உள்ள கூடலூர் வரை சைக்கிளில் சென்று வந்தார். அப்போது கூடலூர் பகுதியில் உள்ள பொதுமக்களிடையே குறை நிறைகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அங்கிருந்து சைக்கிளில் பைபாஸ் வழியாக கம்பம் நகர் பகுதிக்கு வந்த தங்க தமிழ்ச்செல்வன் கம்பம் நகரில் உள்ள உழவர் சந்தைக்கு திடீரென கள ஆய்வு செய்வதற்கு வந்தார். அங்கு அதிகாரிகளிடம் உழவர் சந்தையில் உள்ள கடைகளின் எண்ணிக்கை, விவசாயிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள், காய்கறிகளின் விலை நிலவரம், மற்ற பகுதிக்கும் கம்பம் பகுதிக்கும் உள்ள காய்கறிகளின் விலை வித்தியாசங்கள் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் உழவர் சந்தையில் உள்ள விவசாயிகளிடம் அவர்களது குறை நிறைகளையும் கேட்டறிந்தார்,தொடர்ந்து உழவர் சந்தையில் இருந்த டிஜிட்டல் விலைப்பட்டியல் பழுதடைந்து காணப்பட்டதை அடுத்து அதனை உடனடியாக சரி செய்யுமாறு அவர் அதிகாரிகளை வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து சைக்கிளில் கம்பம் போக்குவரத்து சிக்னல் அருகே எம்பி வந்தபோது அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த கம்பம் நகராட்சி தூய்மை பணியாளர்களை சந்தித்தார். அவர்களின் பணிகளின் தன்மைகள் நேரங்கள் மற்றும் அவர்களது நிறை குறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம் பி தங்க தமிழ்ச்செல்வன் கூறுகையில், இன்று வழக்கமான சைக்கிள் பயிற்சிகளை கொண்டிருந்தபோது கம்பம் உழவர் சந்தைக்கு சென்று அங்கு விவசாயிகளையும், அதிகாரிகளையும் சந்தித்தேன் அதனைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்களை சந்தித்து உரையாடினேன் என தெரிவித்தார், தொடர்ந்து தெரு நாய்கள் பொது இடங்களில் கூட்டம் கூட்டமாக பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக சுற்றி வருவது, தொல்லைகள் தருவது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய போது அதற்கு அவர் அனைத்து பகுதிகளிலும் தெருநாய்களை தொல்லைகள் இருப்பதாகவும் அதனை கட்டுப்படுத்துவதற்கு விலங்குகள் நல ஆணையத்திடம் வலியுறுத்துவேன் என தெரிவித்தார்.
தொடர்ந்து தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆனவுடன் மத்தியில் இரண்டு அமைச்சர்களை சந்தித்துள்ளேன். நெடுஞ்சாலைத்துறை நித்தின் கட்காரி அவரை சந்தித்து தேனி, உசிலம்பட்டி, போடி, ஆண்டிபட்டி போன்ற பகுதிகளுக்கு புறவழிச் சாலை வேண்டும் என தெரிவித்துள்ளேன் அதற்கு அவர்கள் செய்து தருவதாக உறுதியளித்துள்ளனர். மேலும் திண்டுக்கல் சபரிமலை இடையே ரயில் போக்குவரத்திற்காக ரயில்வே அமைச்சரை சந்தித்து பேசினேன் ஆனால் தற்போதைக்கு சபரிமலை வரை ரயில் போக்குவரத்து மேற்கொள்ள முடியாது எனவும், கொடைக்கானல் தேனி பகுதிகளில் ரயில்வே ஜங்ஷன் இருப்பதால் இதற்கிடையே ரயில் பாதை அமைத்தால் நேரடியாக காஷ்மீர் வரை செல்ல வாய்ப்புள்ளது எனவே இந்த இரண்டு ப்ரொபஷனல் முதல் கூட்டம் தொடரில் வைத்து விட்டு வந்துள்ளேன் இரண்டும் நிறைவேறும் என நம்பிக்கை உள்ளதாக அவர் தெரிவித்தார்.