L Ganesan Dead: நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் காலமானார் - அவரது வாழ்க்கை வரலாறு தெரியுமா.?
பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல. கணேசன் காலமானார். 80 வயதான அவர், சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார். அவரது வாழ்க்கை குறிப்பை பார்க்கலாம்.

நாகாலாந்து ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான இல. கணேசன் காலமானார். அவருக்கு வயது 80. சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி
கடந்த 7-ம் தேதி, தனது சென்னை வீட்டில், படியில் இருந்து விழுந்து இல. கணேசனுக்கு தலையில் அடிபட்டது. அதைத் தொடர்ந்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி, இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 80.
ஆளுநராக உயர்வு
இல. கணேசன், பாஜகவின் செயற்குழு உறுப்பினர்களுள் ஒருவராக இருந்தார். 1991-ல் பாஜக-வின் மாநில அமைப்புச் செயலாளரானார். 2009, 2014 மக்களவைத் தேர்தல்களில், தென் சென்னை தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். பின்னர், மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகி, 2016 அக்டோபரில் பதவியேற்றார்.
கடந்த 2021 ஆகஸ்ட்டில் மணிப்பூர் ஆளுநராக பொறுப்பேற்ற இல. கணேசன், 2023 பிப்ரவரி வரை அப்பதவியில் பணியாற்றினார். அதனிடையே, 2022 ஜூலை முதல் நவம்பர் மாதம் வரை, மேற்கு வங்க மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்தார். பின்னர், பிப்ரவரி 2023-ல் 19-வது நாகாலாந்து ஆளுனராக நியமிக்கப்பட்டார்.
ஆரம்பகால வாழ்க்கை
இல. கணேசன் 1945ல் தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் பிறந்தவர். அரசியல் ஈடுபாடு காரணமாக திருமணம் செய்துகொள்ளலாமல் தனது அண்ணன் குடும்பத்துடன் வசித்து வந்தார். சிறு வயதில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மீது கொண்ட ஈடுபாட்டால், சமூக வேலைகளில் தன்னை இணைத்துக்கொண்டவர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்ந்தது, பின்னாளில் அவரை ராஜ்ய சபா எம்.பி. பதவி வரை உயர்த்தியது.
இளைஞராக இருந்த காலத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தீவிரமாக ஈடுபட்டிருந்தவர் 70-களில் எமர்ஜென்ஸி கலவர காலக்கட்டத்தில் போலீசாரிடமிருந்து தப்பித்து, சுமார் ஒரு வருட காலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். அந்த நாட்களில் தற்போதைய தமிழ்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறனுடன் நட்புறவில் இருந்துள்ளார்.
மத்தியில் திமுக பாரதிய ஜனதாவுடன் நேச உறவில் இருந்த காலத்தில், மறைந்த திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதியுடனும் நட்புறவில் இருந்துள்ளார் கணேசன்.
இல.கணேசன் ஆளுநராக நியமிக்கப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு 2015ம் ஆண்டிலிருந்தே தொடர்ந்து வந்தது. 2020ம் ஆண்டு கூட அவர் புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்படுவார் என்கிற செய்தி அரசல்புரசலாக வெளியானது. பின்னர் அந்தச் செய்தி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் 2021 ஆகஸ்ட்டில் மணிப்பூரி ஆளுநராக நியமிக்கப்பட்டார் இல. கணேசன்.





















