Edappadi Palanisamy: 2026-ல் 'காப்பி பேஸ்ட்' பெயிலியர் மாடல் தி.மு.க. அரசை மக்கள் வீட்டுக்கு அனுப்புவது உறுதி! - இபிஎஸ் அறிக்கை
எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ‘தாயுமானவர்‘ திட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளதோடு, 2026 சட்டமன்ற தேர்தலில், மக்கள் திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவது உறுதி என தெரிவித்துள்ளார்.

‘தாயுமானவர்‘ திட்டத்தை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தங்களது திட்டங்களை திமுக அரசு ‘காப்பி பேஸ்ட்‘ செய்வதாக விமர்சித்துள்ளார். அவரது அறிக்கை குறித்த முழு விவரங்களை தற்போது பார்க்கலாம்.
எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை
இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டம்' என்ற பெயரிலான இப்புதிய திட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பங்கேற்பும் உறுதி செய்யப்படும்' என்று வெற்று விளம்பர ஆட்சியில் அனைத்துமே தாமதம் என்பது போல், 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிதிநிலை அறிக்கையிலே அறிவித்த இத்திட்டத்தை “ஸ்டாலின் மாடல் அகராதியின்படி போர்க்கால அடிப்படையில்' - அதாவது 18 மாதம் தாமதமாக, ஆட்சி முடிவடையும் தருவாயில், மேலே அறிவித்தபடி கல்வி, வேலை வாய்ப்பு, திறன் மேம்பாடு, வீடுகள் வழங்குதல் என்ற எந்தவித நன்மைகளையும் வழங்காமல், 3 நாட்களுக்கு முன்பு 12.8.2025 அன்று, வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு, வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்றும், அத்திட்டத்திற்கு "தாயுமானவர்' என்றும் பெயர் சூட்டியுள்ளார். 'சொல்வது ஒன்று; செய்வது ஒன்று' இதுதான் ஸ்டாலினின் திராவிட மாடல்.
ஏற்கெனவே, எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், 21.9.2020 அன்று 9 கோடி ரூபாய் செலவில் 3501 ‘நகரும் நியாய விலைக் கடைகள்' தமிழகமெங்கும் தொடங்கி வைக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் 37 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்படி, பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள், அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கே நேரடியாக எடுத்துச் சென்று வழங்கப்பட்டது. இத்திட்டம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திட்டமாகும்.
இப்படி எங்கள் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல திட்டங்களுக்கு 'காப்பி பேஸ்ட்' செய்து, தனது பெயரை அல்லது புதுப் பெயரை சூட்டி அரசுப் பணத்தில் பலகோடி ரூபாய் செலவில் வெற்று விளம்பரங்கள் மேற்கொள்வதைத்தான் நாங்கள் 'பெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசு' என்று கூறுகிறோம். "தாயுமானவர்" என்று அழகிய தமிழில் பேசினால், மக்களுக்கு உங்கள் லட்சணம் தெரியாதா?
51 மாதங்களாக எந்த புதிய திட்டத்தையும் உருவாக்க முடியாத தி.மு.க. அரசு, தேர்தல் நெருங்கியவுடன் தொடர்ந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திட்டங்களை தூசு தட்டி, புதிய பெயர் வைத்து விளம்பரப்படுத்துகிறது.
மு.க.ஸ்டாலின் அவர்களே, அ.இ.அ.தி.மு.க.-வின் நகரும் ரேஷன் கடை திட்டத்தில் தெளிவு இருந்தது. மூன்று நாட்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட உங்களது திட்டத்தில் ஏதேனும் தெளிவு உள்ளதா? ரேஷன் பொருட்களை எந்த வாகனங்களில் கொண்டு செல்லப்போகிறீர்கள்? பல இடங்களில் தனியார் வாகனங்களை பயன்படுத்துவதாகத் தகவல்கள் வருகின்றன. அவர்களுக்கு பணம் யார் வழங்குவார்கள்? அவர்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதா? டெண்டர் விவரங்களை வெளியிடுவீர்களா? 30 கோடி ரூபாய் செலவு என நீங்களே கூறி இருக்கிறீர்கள். இந்தத் தொகை யாருக்கு செல்கிறது? தனியார் வாகன உரிமையாளர்களுக்கா? தி.மு.க.வினருக்கா? அல்லது விளம்பரச் செலவிற்கா?
பொது விநியோகத் துறையில் 200 கோடி ரூபாய்க்குமேல் பாக்கி வைத்து, நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்கும் அவல நிலையில் உள்ள இந்த அரசு, "தாயுமானவர்" என்று அழகிய தமிழில் பேசினால், மக்களுக்கு உங்கள் லட்சணம் தெரியாதா? 2024-25 நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பல்வேறு அறிவிப்புகளை உள்ளடக்கிய 'தாயுமானவர்' திட்டம் வேறா? தற்போது திரு. ஸ்டாலின் துவக்கியுள்ள ரேஷன் பொருட்களை முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும் நேரடியாக வழங்கும் இத்திட்டம் வேறா?
மற்றவர்களைப் பார்த்து, காப்பியடித்து, வெட்டி விளம்பரம் செய்யும் வெற்று விளம்பர ஆட்சியாளர்கள் தமிழகத்திற்குத் தேவையில்லை. சொந்தமாக சிந்தித்து, மக்களின் தேவைகளை உணர்ந்து, திட்டங்களை தீட்டுபவர்களே தமிழகத்திற்குத் தேவை. ஆட்சி முடியும் தருவாயில், தேர்தலை மனதில் வைத்து தமிழக மக்களின் வரிப் பணத்தில் கோடிக்கணக்கான ரூபாய் வெற்று விளம்பரங்களுக்காக செலவழித்து, தனது புகைப்படத்தை விளம்பரம் செய்தாலும், வரும் 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தமிழக மக்கள் 'காப்பி பேஸ்ட்' பெயிலியர் மாடல் தி.மு.க அரசை வீட்டுக்கு அனுப்புவது உறுதி!” என்று தனது அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.






















