Abortion Rights : பெண்ணுக்கான கருக்கலைப்பு உரிமை.. வேண்டுமா? வேண்டாமா? உயர்நீதிமன்றம் அதிரடி..
கருவில் உள்ள குழந்தை பயங்கர உடல்நலை குறைபாடுடன் இருப்பது தெரிய வந்ததையடுத்து, கருவை கலைக்க பெண் ஒருவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
கர்ப்பத்தை கலைக்க வேண்டுமா? வேண்டாமா? என்ற முடிவை எடுக்கும் உரிமை பெண்ணுக்கு மட்டுமே உண்டு என மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து தெரிவித்துள்ளது.
கருவில் உள்ள குழந்தை பயங்கர உடல்நலை குறைபாடுடன் இருப்பது தெரிய வந்ததையடுத்து, கருவை கலைக்க பெண் ஒருவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கவுதம் படேல், எஸ்.ஜி.டிகே ஆகியோர் கொண்ட அமர்வு, 32 வார கருவை கலைக்க அனுமதி வழங்கியது. இந்த வழக்கின் தீர்ப்பு ஜனவரி 20ஆம் தேதி வழங்கப்பட்ட நிலையில், அதன் நகல் நேற்று முன்தினம் நீதிமன்றத்தின் வலைப்பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. முன்னதாக, அந்த பெண்ணுக்கு ஆதரவாக வழக்கறிஞர் அதிதி சக்சேனா மும்பை உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் தாக்கல் செய்த மனுவில், "டிசம்பர் 22 அன்று வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோனோகிராஃபி செய்யப்பட்டதில் கருவில் உள்ள குழந்தை வழக்கத்திற்கு மாறான உடல் நல குறைபாடுடன் இருப்பது தெரிய வந்தது" என குறிப்பிட்டது.
இதைத் தொடர்ந்து, டிசம்பர் 30ஆம் தேதி, கருவை கலைப்பது தொடர்பாக மருத்துவக் கருவுறுதல் சட்டத்தின்படி மருத்துவ வாரியம் அமைக்கப்பட்டது. கருவில் உள்ள குழந்தை குறைபாட்டுடன் இருப்பதை மருத்துவ வாரியம் உறுதிப்படுத்தியது. மேலும், குழந்தை மன நல குறைபாட்டுடன் இருக்கலாம் என்றும் தெரிவித்தது. ஆனால், இந்த இரண்டு குறைபாடுகளும் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்றும் கூறியது. மேம்பட்ட கர்ப்ப காலத்தைக் கருத்தில் கொண்டு கர்ப்பத்தை கலைப்பதற்கான பெண்ணின் கோரிக்கையை மருத்துவ வாரியம் நிராகரித்தது.
இருப்பினும், தான் ஒரு ஏழ்மையான குடும்ப பின்னணியில் இருந்து வந்ததாகவும், குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைக்கு கூடுதல் பராமரிப்பு அளிக்கவும் அதற்கான செலவுகளை ஈடுகட்ட முடியாது என்று பெண் கூறியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடுமாறு கோரிக்கை விடுத்தார்.
இந்த கட்டத்தில் கர்ப்பத்தை கலைப்பது பெண்ணுக்கு உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ ஆபத்தை ஏற்படுத்துமா என்பதை ஆராய மனநல மருத்துவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
தற்போது அந்த பெண்ணுக்கு மருத்துவ ரீதியாகவும் மகப்பேறு ரீதியாகவும் மனநல சிக்கல்கள் எதுவும் இல்லை என்றும் ஆனால் கர்ப்பகாலத்தை கருத்தில் கொண்டு மருத்துவ ரீதியாக கர்ப்பத்தை கலைப்பது பரிந்துரைக்கப்படவில்லை என்றும் மனநல மருத்துவர் சான்று அளித்தார்.
வழக்கறிஞரின் வாதத்தை கேட்டறிந்த நீதிபதிகள், கர்ப்பத்தை கலைக்க அனுமதி வழங்கினர். பெண்ணின் உரிமைகள் சட்டத்திற்கு உட்பட்டவை என்று கண்டறியப்பட்டவுடன் அதை ரத்து செய்வது மருத்துவ வாரியத்தின் உரிமையல்ல, நீதிமன்றத்தின் உரிமையும் அல்ல என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.