Gurugram: குருகிராமில் சத்தமாக பாட்டு கேட்ட நபரை தட்டிக்கேட்ட பெண்.. கடுமையாக தாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்..
பக்கத்து கடை உரிமையாளர் சத்தமாக பாட்டு கேட்டதற்காக போலீசில் புகார் அளித்த பெண் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டார். சந்தேகநபர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை எனவ காவல் துறையினர் தெரிவித்தனர்.
குருகிராம்: சதார் பஜார் பகுதியில் பக்கத்து கடை உரிமையாளர் சத்தமாக பாட்டு கேட்டதற்காக போலீசில் புகார் அளித்த பெண் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டார் என காவல் துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவம் திங்கட்கிழமை இரவு நடைபெற்றதாகவும் சந்தேகநபர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.
சந்தேகநபர் கடிகார பழுதுபார்க்கும் கடையை வைத்திருப்பக்தாகவும், மேலும் அந்த பகுதியில் பல கடை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் சத்தமாக பாட்டு கேட்கும் பழக்கத்தை கைவிடுமாறு அல்லது சத்தத்தை குறைக்குமாறு பலமுறை அவரிடம் கேட்டுள்ளனர். ஆனால் அந்த நபர் அதை பொருட்படுத்தவில்லை. புகார் அளித்தப் பெண் அந்தப் பகுதியில் பாத்திரக் கடை வைத்துள்ளார் என கூறப்படுகிறது.
திங்கள்கிழமை மதியம், கீதா ராணி (52) என்ற பெண், பக்கத்து கடை உரிமையாளர் மிகவும் சத்தமாக பாட்டு கேட்பதை பற்றி காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்ததாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர் இது போன்ற சம்பவம் மீண்டும் இடம்பெற கூடாது என அந்த கடை உரிமையாளரிடம் எச்சரித்து சென்றனர். இருந்த போதும் அன்று மாலை மீண்டும் அந்த நபர் மிகவும் சத்தமாக பாட்டு கேட்டுள்ளார்.
இதனால் ராணி மற்றும் அந்த நபர் இடையே கடும் வாக்கு வாதம் வெடித்தது. அந்த நபர் மற்றும் அவருடை தாய், சகோதரி ஆகிய மூவரும் ராணியை கடுமையாக தாக்கி முடியை பிடித்து இழுத்துச் சென்றனர். மேலும் ராணியின் கடையில் இருக்கும் பொருட்களை சாலையில் வீசியும், போலீஸில் புகார் அளித்ததற்காக கடுமையான சிக்கல் சந்திக்க நேரிடும் எனவும் மிரட்டியதாக கூறப்படுகிறது.
பின் ராணியை அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு பொது மக்கள் அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டப்பின் வீடு திரும்பினார். ராணியின் புகாரின் பேரில், செவ்வாய்க்கிழமை குருகிராம் நகர காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 34 (பொது நோக்கம்), 323 (காயப்படுத்துதல்) மற்றும் 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் சந்தேக நபர்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குருகிராம் காவல்துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி சுபாஷ் போகன், சிசிடிவி காட்சிகளை சேகரித்து வருவதாகவும், சந்தேக நபர்கள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.