(Source: ECI | ABP NEWS)
New 8 EV Cars Launch: ஒரு முறை சார்ஜ் செய்தாலே 500 கி.மீட்டர் பறக்கலாம்.. இந்தியாவில் அறிமுகமாகும் 8 மின்சார கார்கள் லிஸ்ட்!
இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ள மஹிந்திரா, டாடா, வின்ஃபாஸ்ட் ஆகிய நிறுவனங்களின் 8 புதிய கார்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல் கார்களுக்கு மாற்றாக மின்சார கார்கள் பயன்பாடு பெருகி வருகிறது. இந்திய சாலைகளும் சமீபகாலமாக மின்சார கார்களால் நிரம்பி வழிகிறது. எதிர்காலத்தில் மின்சார கார்களின் ஆதிக்கம் அதிகளவு காணப்படும் என்றே கருதப்படுகிறது. இதனால், முன்னணி கார் நிறுவனங்கள் புதிய மின்சார கார்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் அடுத்த ஓராண்டுக்குள் இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ள புதிய மின்சார கார்களை கீழே காணலாம்.
1. மாருதி சுசுகி இ விதாரா:
இந்தியாவின் முன்னணி கார் நிறுவனம் மாருதி சுசுகி. குஜராத்தில் இந்த மாருதி சுசுகி இ விதாரா கார் தயாராக உள்ளது. 61.1 கிலோ வாட் பேட்டரி திறன் கொண்ட காரும், 48.8 கிலோ வாட் பேட்டரி திறன் கொண்ட காரும் தயாராக உள்ளது. 61.1 கிலோ வாட் பேட்டரி திறன் கொண்ட கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிலோ மீட்டர் வரை செல்லும் திறன் கொண்டது ஆகும். மேலும், வேகமாக சார்ஜ் வகையில் இதன் பேட்டரி வடிவமைக்கப்பட உள்ளது. ஜீரோவில் இருந்து 8 சதவீதம் சார்ஜ் ஆவதற்கு 15 நிமிடங்களே ஆகும் வகையில் இதன் சார்ஜிங் திறன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

2. மஹிந்திரா XEV 7e மற்றும் XUV 3XO:
மஹிந்திரா நிறுவனம் மின்சார கார்கள் தயாரிப்பில் அசத்தி வருகிறது. மஹிந்திராவின் 3 வரிசைகள் இருக்கைகள் கொண்ட மின்சார எஸ்யூவி கார்களில் XEV 7e தான் முதல் தயாரிப்பாகும். இதை விரைவில் அறிமுகப்படுத்த மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. இந்த கார் XUV.e8 அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுகிறது. மேலும், XUV700 காரில் உள்ள சிறப்பம்சங்களும், வடிவங்களும் இந்த காரில் இடம்பெற உள்ளது. தொடர் பரிசோதனையில் உள்ள XUV 3XO மின்சார காரும் பல கட்ட சோதனைக்கு பிறகு விரைவில் சந்தைக்கு வர உள்ளது. இந்த கார்கள் அடுத்தாண்டு தொடக்கத்திற்குள் சந்தைக்கு வர உள்ளது.
3. டாடா பஞ்ச் பேஸ்லிஃப்ட்:

டாடா நிறுவனத்தின் டாடா பஞ்ச் கார் இந்தியாவில் சக்கைப் போடு போட்ட கார் ஆகும். இதன் மின்சார வடிவமே டாடா பஞ்ச் பேஸ்லிப்ட் ஆகும். இந்த கார் அடுத்தாண்டு சந்தைக்கு வர உள்ளது. கேபினிலும், சில வடிவங்களிலும் மாற்றம் செய்ய உள்ளனர். ரேஞ்சில் எந்த மாற்றமும் செய்தது போன்று தகவல் வெளியாகவில்லை. ஆனாலும், நல்ல ரேஞ்ச் மற்றும் தரத்தில் இந்திய சாலைக்கு ஏதுவாக இந்த கார் இருக்கும் என்றே கருதப்படுகிறது.
4. வின்ஃபாஸ்ட் விஎஃப் 6, விஎஃப் 7:

வெளிநாடுகளில் மிகவும் பிரபலமான கார் வின்ஃபாஸ்ட். இந்த காரின் தொழிற்சாலை தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் இயங்கி வருகிறது. இவர்களது மின்சார காரான வின்ஃபாஸ்ட் 6 மற்றும் 7 மாடல்கள் தயாராகி வருகிறது. இந்த கார் விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வருகிறது. விலை, எப்போது சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது? என்ற தகவல் வெளியாகவில்லை. விஎஃப் 6 காரின் பேட்டரி ஒரு முறை சார்ஜ் செய்தாலே 480 கி.மீட்டர் செல்லும் திறன் கொண்டது.
5. எம்ஜி எம்9 மற்றும் சைபர்ஸ்டெர்:
இந்திய கார் சந்தையில் சமீபகாலமாக அதிகளவு விற்பனையாகும் கார்களில் எம்ஜி முக்கியமான கார் ஆகும். இவர்களும் தங்களது மின்சார காரை அறிமுகப்படுத்த உள்ளனர். பல்வேறு சொகுசு வசதிகளுடன் புதிய சைபர்ஸ்டெர் காரும், எம்9 சொகுசு காரும் அறிமுகமாக உள்ளது. மின்சார கார்களான இந்த இரண்டு கார்களும் எம்ஜி-யின் தேர்வு செய்யப்பட்ட டீலர்கள் மூலமாக மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது. எம்9 கார் இன்னும் சில வாரங்களில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சைபர்ஸ்டெர் காரின் விற்பனை தேதி எப்போது? என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்த கார்கள் இந்திய சந்தைக்கு வந்தால் இந்திய மின்சார கார்கள் விற்பனையில் இந்த கார்களின் ஆதிக்கமே அதிகளவு இருக்கும் என்று கார் நிபுணர்கள் கணித்துள்ளனர்.





















