Aadi Krithigai 2025 Date: ஆடிக்கிருத்திகை நாளையா? ஆகஸ்ட் 16ம் தேதியா? பக்தர்களே விரதம் இருக்க சரியான நாள் இதுதான்!
Aadi Krithigai 2025 Date in Tamil: முருகப்பெருமானுக்கு உகந்த ஆடிக்கிருத்திகை நாளையா? அல்லது ஆகஸ்ட் 16ம் தேதியா? என்ற குழப்பம் பக்தர்களுக்கு எழுந்துள்ளது.

தமிழ் மாதங்களிலே மிகவும் பக்திமயமான மாதமாக இருப்பது ஆடி மாதம் ஆகும். இந்த ஆடி மாதத்தில் ஒவ்வொரு நாளும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படும் நிலையில், ஆடிக்கிருத்திகை தனித்துவம் வாய்ந்த நாளாக இருக்கிறது. தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளாக இந்த நாள் போற்றப்படுகிறது.
ஆடிக்கிருத்திகை என்றால் என்ன?
சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய தீப்பொறிகள் சரவண பொய்கையில் இருந்த ஆறு தாமரைகளில் இருந்து ஆறு குழந்தைகளாக அவதரித்தன. அந்த ஆறு குழந்தைகளையும் கார்த்திகைப் பெண்கள் வளர்த்தனர். ஆறு குழந்தைகளாக அவதரித்த முருகப்பெருமானை வளர்த்தெடுத்த கார்த்திகைப் பெண்களை போற்றும் விதமாக கார்த்திகை நட்சத்திரமாகவும் வரத்தை சிவபெருமான் அவர்களுக்கு அளித்தார்.

மேலும், இந்த நன்னாளில் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்த ஏற்ற நாள் என்றும் புராணங்களில் கூறப்படுகிறது. ஒவவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும், ஆடி மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரம் ஆடிக்கிருத்திகையாக கொண்டாடப்படுகிறது.
ஆடிக்கிருத்திகை எப்போது?
தற்போது ஆடி மாதம் நடந்து வரும் நிலையில் ஆடிக்கிருத்திகை எப்போது? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கேள்விக்கும், குழப்பத்திற்கும் காரணம் ஆடி மாதத்தில் இரண்டு கார்த்திகை நட்சத்திரம் வருவதே ஆகும்.
நடப்பு ஆடி மாதத்தில் ஆடி 4ம் தேதியும், ஆடி 31ம் தேதியும் கார்த்திகை நட்சத்திரம் வருகிறது. அதாவது, ஜுலை 20ம் தேதியான நாளையும், ஆகஸ்ட் 16ம் தேதியும் கார்த்திகை நட்சத்திரம் வருகிறது. இதனால், இதில் எந்த நாள் ஆடிக்கிருத்திகையாக கொண்டாடுவது என்ற குழப்பம் பக்தர்களுக்கு எழுந்துள்ளது.

ஆடி மாதத்தில் வரும் இந்த இரண்டு கார்த்திகை நட்சத்திர நாட்களுமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாள் ஆகும். முருகப்பெருமானின் முதல் அறுபடை வீடான திருப்பரங்குன்றத்தில் ஆடிக்கிருத்திகை நாளை( ஜுலை 20ம் தேதி) கொண்டாடப்படுவதாக அறிவித்துள்ளனர்.
ஆனால், முருகனின் மற்ற அறுபடை வீடுகளான திருச்செந்தூர், பழனி மற்றும் திருத்தணியில் ஆகஸ்ட் 16ம் தேதியே ஆடிக்கிருத்திகை என்று அறிவித்துள்ளனர். இதனால், இந்த இரண்டு ஆடிக்கிருத்திகை நாட்களிலும் முருகனை போற்றி வணங்குவது சிறப்பாகும்.
விரதம் எப்போது இருக்கலாம்?

குழந்தைப் பேறு, திருமண வரம் உள்ளிட்ட வேண்டுதல்களுக்காக ஆடிக்கிருத்திகையில் விரதம் இருப்பது பக்தர்களின் வழக்கம் ஆகும். ஜுலை 20ம் தேதியான நாளை ஏகாதசி நாளில் இந்த கார்த்திகை நட்சத்திரம் வருகிறது. இந்த நாள் முப்பெரும் கடவுளான சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோர் இணைந்த நாளாக வருகிறது.
ஆகஸ்ட் 16ம் தேதி வரும் ஆடிக்கிருத்திகை தேய்பிறையில் அஷ்டமி நாளில் கார்த்திகை நட்சத்திரம் வருகிறது. இந்த நாள் கிருஷ்ண பகவான் அவதரித்த கோகுலாஷ்டமி ஆகும். இந்த நாள் முருகன், பெருமாள், சனிபகவான் மற்றும் பைரவருக்கு மிகவும் உகந்த நாள் ஆகும். பக்தர்கள் தங்களுக்கு உகந்த ஏதாவது ஒரு நாளில் விரதம் இருப்பது நல்லது ஆகும். இரண்டு நாட்களிலும் விரதம் இருக்க முடியும் எனும் பக்தர்கள் இரண்டு நாட்களிலும் இருக்கலாம். ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அறுபடை முருகன் கோயில் மட்டுமின்றி அனைத்து முருகன் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் நாளை அலைமோதும் என்பது குறிப்பிடத்தக்கது.






















