![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறாரா சித்தராமையா? கர்நாடக அரசியலில் பரபரப்பு!
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என கோரிக்கை எழுந்து வரும் நிலையில், வரும் 22ஆம் தேதி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்க உள்ளது.
![முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறாரா சித்தராமையா? கர்நாடக அரசியலில் பரபரப்பு! Will Karnataka CM Siddaramaiah resign Urgent meeting of Congress Legislative Committee called on 22nd August முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறாரா சித்தராமையா? கர்நாடக அரசியலில் பரபரப்பு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/19/1d5e684fccc9a7f100209531544b0d3d1724069045014729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் (முடா) நிலத்தை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ள நிலையில், கர்நாடக முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா மீது வழக்குத் தொடர அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி அளித்திருந்தார்.
முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் சித்தராமையா? சிட்டிங் முதலமைச்சருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் வழங்கி இருப்பது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முதலமைச்சர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான பாஜகவும் அதன் கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளமும் வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், காங்கிரஸ் சட்டப்பேரவை குழு கூட்டமானது வரும் 22ஆம் தேதி கூட்டப்பட உள்ளது. இதனால், முதலமைச்சர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய உள்ளாரா என சந்தேகம் எழுந்துள்ளது.
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்: முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பெயரில் உள்ள சுமார் 3 ஏக்கர் நிலத்தை, மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் கையகப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு பதிலாக, அவருக்கு கூடுதல் மதிப்புள்ள நிலங்கள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
மேலும், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது , மனைவியின் சொத்து மதிப்பு குறித்து சித்தராமையா தெரிவிக்கவில்லை என சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்த ஆபிரகாம் என்பவர் ஆளுநர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
இது குறித்து கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறுகையில், "இது முற்றிலும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. முதல்வர் சித்தராமையா தலைமையில் வலுவான அரசு உள்ளது. ஆளுநர் அலுவலகத்தை பயன்படுத்தி அரசை சீர்குலைக்க பாஜக முயற்சிக்கிறது.
சித்தராமையா பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை, பதவியில் நீடிப்பார். "நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம், முழுக்கட்சியும் அவருடன் நிற்கிறது. அவர் எந்த ஆட்சியிலும் எந்த தவறும் செய்யவில்லை. இது முழுக்க முழுக்க அரசியல் பிரச்னை.
ஆளுநர் அலுவலகத்தை இந்த பாஜக அரசு தவறாக பயன்படுத்துகிறது. சட்டரீதியாக நாங்கள் போராடுவோம். இந்த நாட்டின் சட்டத்தின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது, எங்களது அரசாங்கம் பாதுகாக்கப்படும்" என்று சிவக்குமார் தெரிவித்திருக்கிறார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)