Viral video: ”இந்த ரோட்டை பாருங்களேன்..” : செய்தியாளராக மாறி வறுத்தெடுத்த குட்டி சிறுமி..
குழந்தைகள் எது செய்தாலும் அழகுதான். அதுவும் குட்டிக் குழந்தை செய்தியாளராக மாறி சமூக அக்கறையுடன் செய்தி சொன்னால் ரசிக்காமல் இருக்க முடியுமா?
குழந்தைகள் எது செய்தாலும் அழகுதான். அதுவும் குட்டிக் குழந்தை செய்தியாளராக மாறி சமூக அக்கறையுடன் செய்தி சொன்னால் ரசிக்கமுடியாமல் இருக்க முடியுமா? முடியாது அல்லவா?
அப்படித்தான் இந்த காஷ்மீர் சிறுமியின் ரிப்போர்டிங் கன்னியாகுமரி வரை பிரபலமாகிவிட்டது.
ஆனால் இந்த ரிப்போர்டிங் எப்போது நடந்தது எனத் தெரியவில்லை. கலைக்கு கால வரம்பில்லாதது. இந்தக் குழந்தைக்கு கைவந்த கலையாக இருக்கும் இந்த ரிப்போரட்டிங்குக்கும் கால வரம்பு கிடையாது என வைத்துக் கொள்வோம். குழந்தை சிவப்பு நிற ஜேக்கட் அணிந்து லிட்டில் ரெட் ரைடிங் ஹூட் கதையில் வரும் சிறுமியைப் போல் ஜொலிக்கிறார்.
அந்தக் குழந்தை கையில் ஒரு சிறிய மைக் வைத்துக் கொண்டு ரிப்போர்ட்டிங்கை துவக்குகிறார். அஸ்ஸலாமு அலே கும் என்று இறைவணக்கத்துடன் துவக்கும் சிறுமி, இங்கே பாருங்கள், இந்தச் சாலையைப் பாருங்கள் இது எவ்வளவு மோசமாக இருக்கிறது என்று பாருங்கள் என்று கூறுகிறார். அவருக்குக் கேமரா பெர்சனாக இணைந்துள்ளார் அவரது தாய். ஒரு தேர்ந்த ரிப்போர்ட்டர் கேமராமேனை பணிப்பதுபோல், இந்தக் குழிகளை நன்றாகக் காட்டுங்கள் என்று அன்னைக்கு உத்தரவிடுகிறார். அவரும் கேமராவை பேன் செய்து அங்குமிங்கும் இருக்கும் குழிகளைக் காட்டுகிறார். அந்தக் குழந்தையின் வருத்தம் என்னவென்றால் மோசமான சாலையால் தன் வீட்டுக்கு உறவினர்கள் வர முடியவில்லை என்பதே. குழந்தைகள் தான் உறவுகளை விரும்புகின்றன. இந்தக் காலத்தில் பெரியவர்கள் எல்லாம் வீட்டுக்கும் யாரும் வந்துவிடக் கூடாது என்ற மனப்பான்மையில் உள்ளனர்.
கடும் பனியும், மழையும் காஷ்மீர் பள்ளத்தாக்கு சாலையில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பை குழந்தை கூறுவது இந்நேரம் நிச்சயமாக சம்பந்தப்பட்டவர்களில் காதுகளில் எட்டியிருக்கும். ஒருவேளை குழந்தையின் வீடியோ இப்போது எடுக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது நலம்.
இந்த வீடியோவை இந்தச் செய்தியை ஷேர் செய்த நேரத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். வெறும் 2 நிமிடங்கள் 8 விநாடிகள் ஓடும் இந்த வீடியோ இணையவாசிகளின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டுள்ளது. சாலையை மட்டும் அச்சின்னப் பெண் குறை சொல்லவில்லை. சாலைகளில் குப்பைகளை வீசும் பொறுப்பற்ற மக்களையும் சேர்த்தே குறை சொல்லியுள்ளார்.
Meet Youngest reporter from the #Kashmir Valley. pic.twitter.com/4H6mYkiDiI
— Sajid Yousuf Shah (@TheSkandar) January 9, 2022
;மேலும், பொதுமக்களை தனது வீடியோவை லைக் செய்து ஷேர் செய்து சப்ஸ்க்ரப் செய்யுமாறும் வேண்டுகிறார். விரைவில் அடுத்த வீடியோவில் சந்திக்கிறேன் என வாக்குறுதி அளித்து விடைபெற்றுச் செல்கிறார். இதுமுதன்முறையல்ல..
காஷ்மீர் பள்ளத்தாக்கு குழந்தை ஊடக கவனத்தை ஈர்ப்பது இது முதன் முறையல்ல. ஏற்கெனவே, மஹிரு இர்ஃபான் என்ற குழந்தை தனக்கு ஆன்லைன் வகுப்பு நேரத்தைக் குறைக்க வேண்டும் என்று வீடியோவில் பிரதமர் மோடிக்கே கோரிக்கை விடுத்தது. அந்தக் குழந்தையின் வீடியோ வைரலாக ஒட்டுமொத்த ஊடகமும் அந்தக் குழந்தையின் வீட்டின் முன்னே வரிசைக்கட்டி நின்றன.
இப்போதும் இந்தக் குழந்தையின் அடையாளம் தெரிந்தால் போதும் இவர் வீட்டின் முன்பும் மக்கள் குவிந்துவிடுவர்.