PM Modi: யோகா இந்தியாவில் தோன்றி இருந்தாலும் அதற்கு ”ராயல்ட்டி” கிடையாது - அமெரிக்காவில் பிரதமர் மோடி
PM Modi: சர்வதேச யோகா தினத்தையொட்டி நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கட்டிடத்தில் யோகா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
சர்வதேச யோகா தினத்தையொட்டி நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கட்டிடத்தில் யோகா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் தனது 2வது நாளை தொடங்கினார். பின்னர், அவர் வாஷிங்டன் செல்கிறார், அங்கு அதிகாரப்பூர்வமாக அரசு பயணம் தொடங்கும்.
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற யோகா தின கொண்டாட்டத்திற்கு தலைமை தாங்கிய பிரதமர் நரேந்திர மோடி, யோகாவின் ஒருங்கிணைந்த மற்றும் ஆற்றல்மிக்க தன்மை குறித்து வலியுறுத்தினார்.
அதுகுறித்து இங்கு காணலாம்.
- "ஒவ்வொரு தேசிய இனமும் இன்று இங்கு பிரதிநிதித்துவம் செய்யப்படுவதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது."
- "யோகா என்பது நம்மை ஒன்றிணைக்கும் ஒரு அற்புதமான விஷயம், யோகா என்றால் ஒன்றுபடுவது"
- "யோகா இந்தியாவில் தோன்றியது, இது மிகவும் பழமையான பாரம்பரியத்தின் எடுத்துக்காட்டு, பழமையானது என்றாலும் தற்போதும் யோகா புழக்கத்தில் உள்ளது மற்றும் ஆற்றல் வாய்ந்தது".
- "யோகா பதிப்புரிமை, காப்புரிமை, ராயல்டி ஆகியவற்றிலிருந்து விடுபட்டது. இது நெகிழ்வானது, நீங்கள் தனியாக, குழுவாக பயிற்சி செய்யலாம், ஆசிரியரிடம் கற்றுக்கொள்ளலாம் அல்லது சுயமாக கற்றுக்கொள்ளலாம்."
- "யோகா ஒருங்கிணைக்கிறது, அது உண்மையிலேயே உலகளாவியது. இது அனைத்து இனங்கள், நம்பிக்கை மற்றும் கலாச்சாரங்களுக்கானது."
ஐநா கட்டிடத்தின் வடக்கு புல்வெளியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அறிவியல், கலை மற்றும் பொழுதுபோக்கு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள், அமைச்சர்கள், கல்வியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும், நியூயார்க் மேயர், மூன்று முறை கிராமி விருது பெற்ற ரிக்கி கேஜ், பாடகர் ஃபால்குனி ஷா, நடிகர்கள் ரிச்சர்ட் கெரே மற்றும் பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்காள் கலந்து கொண்டனர்.
வியாழக்கிழமை, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் அவரது குடும்பத்தினர் வழங்கும் விருந்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
இதற்கு முன்னதாக, அமெரிக்கா வாழ் இந்தியர்களின் உற்சாக வரவேற்புக்காக நேற்று நியூயார்க்கில் இறங்கிய பிரதமர் மோடி, பின்னர் நோபல் பரிசு பெற்றவர்கள், கல்வியாளர்கள், தொழில்துறை தலைவர்கள், ஆசிரியர்கள், கணிதவியலாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் தொடர் சந்திப்புகளை நடத்தினார்.
அதன் பின்னர் எலன் மஸ்க்கை சந்தித்தார் பிரதமர் மோடி. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எலன் மஸ்க், “ பிரதமர் மோடி உண்மையிலேயே இந்தியாவிற்கு சரியான விஷயங்களைச் செய்ய விரும்புகிறார் என்று என்னால் சொல்ல முடியும். அவர் வெளிப்படையாக இருக்க விரும்புகிறார், புதிய நிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்க விரும்புகிறார், மேலும் அது இந்தியாவின் சாதகமாக இருப்பதை உறுதிசெய்ய விரும்புகிறார். அடுத்த ஆண்டு மீண்டும் இந்தியாவிற்கு வருகை தர, நான் தற்காலிகமாகத் திட்டமிட்டுள்ளேன். அதற்காகவும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். ஸ்டார்லிங்கை இண்டர்நெட்டை இந்தியாவிற்கும் கொண்டு வர ஆவலுடன் காத்திருக்கிறோம். இதன்மூலம், இந்தியாவில் உள்ள தொலைதூர மற்றும் கிராமப்புற கிராமங்களுக்கு நம்பமுடியாத அளவிற்கு உதவியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் ” என தெரிவித்தார்.