Trump Warns India: “இந்தியாவுக்கு வரிய இன்னும் ஏத்தப் போறேன்“; ட்ரம்ப் விடுத்த புதிய எச்சரிக்கை - எதுக்கு தெரியுமா.?
இந்தியாவிற்கு ஏற்கனவே 25% வரியை விதித்துள்ள ட்ரம்ப், அதை இன்னும் அதிகரிக்கப் போவதாக இன்று எச்சரித்துள்ளார். அது எதற்காக தெரியுமா.?

‘இந்தியாவிற்கு ஏற்கனவே பரஸ்பர வரி என்ற பெயரில் 25 சதவீத வரியை விதித்துள்ள ட்ரம்ப், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்கும் அபராதம் விதித்தார். இந்த நிலையில், இந்தியாவிற்கு வரியை இன்னும் உயர்த்தப் போவதாக இன்று மீண்டும் எச்சரிக்கை விடுத்து, தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது குறித்து தற்போது பார்க்கலாம்.
“உக்ரைன் மக்கள் சாவதை பற்றி கவலைப்படாத இந்தியாவிற்கு வரியை இன்னும் உயர்த்துவேன்“
இந்தியாவிற்கு மற்றுமொரு எச்சரிக்கையை விடுக்கும் வகையில் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெயை வாங்குவது மட்டுமல்ல, அதன் பிறகு, அதில் பெரும்பாலான அளவிலான எண்ணெயை, வெளிச் சந்தையில் அதிக விலைக்கு விற்று பெரிய லாபம் அடைவதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரஷ்யாவின் போர் ஆயுதங்களால், உக்ரைனில் எவ்வளவு மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்பது குறித்து இந்தியா கவலைப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளார் ட்ரம்ப், இதன் காரணமாக, இந்தியா அமெரிக்காவிற்கு செலுத்தும் வரியை கணிசமாக உயர்த்தப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த விஷயத்தில் தங்களது கவனத்திற்கு நன்றி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கண்டித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர்
இந்தியாவிற்கு பரஸ்பர வரியுடன், பொருளாதார தடைகளை மீறி ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் வாங்குவதற்காக, அபராதமும் விதிக்கப்படும் என ட்ரம்ப் ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரும் இந்தியாவின் நிலைப்பாட்டை நேற்று கண்டித்திருந்தார். ட்ரம்பின் நண்பரும், வெள்ளை மாளிகையின் துணை தலைமை பணியாளருமான ஸ்டீஃபன் மில்லர், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் அவர்களின் போருக்கு இந்தியா நிதியுதவி அளிக்கிறது என குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக பேசிய அவர், “அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிற்கு, இந்திய பிரதமர் மோடியுடனான நட்பு என்பது மிகப்பெரியது. ஆனால் அதே நேரம், ட்ரம்ப் மிகத் தெளிவாகக் கூறியது என்னவென்றால், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைனுக்கு எதிரான போருக்கு இந்தியா தொடர்ந்து நிதியளிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல” என ஸ்டீஃபன் மில்லர் தெரிவித்துள்ளார்.
என்ன முடிவெடுக்கப் போகிறது இந்திய அரசு.?
அமெரிக்காவிலிருந்து விமர்சனங்கள் மற்றும் அழுத்தங்கள் இருந்தபோதும், தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள மத்திய அரசு, ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் வாங்குவதில் இருந்து பின்வாங்காத நிலையில், எந்த ஒரு புதிய நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை.
இந்த சூழலில், தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளதால், இப்போது ஏதாவது ஒரு முடிவை எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. அப்படி எடுக்காத பட்சத்தில், இன்னும் கூடுதல் வரியை அமெரிக்காவிற்கு செலுத்த வேண்டிய நிலைமை ஏற்படும். அதே சமயம், இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னைகளும் அதிகரிக்கும்.
மறுபுறம், அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயந்து, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கவில்லை என்றால், அந்நாட்டுடனான நட்பு பாதிக்கப்படும். அமெரிக்காவா, ரஷ்யாவா என்ற நிலை ஏற்பட்டால், இந்தியாவிற்கு ரஷ்யா தான் முக்கியம் என்பதே வரலாறு. அதனால், இந்திய அரசு தற்போது என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.





















